21-வது கால்நடை கணக்கெடுப்பு தயாரிப்பதற்கான உத்திகளை வகுப்பதற்கும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் வகை செய்யும் விரிவான பயிலரங்கை மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைத்தார்.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 21-வது கால்நடை கணக்கெடுப்பைத் தயாரிப்பதற்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்திகளை வகுத்து அதிகாரம் அளிப்பது குறித்த பயிலரங்கை இன்று தொடங்கி வைத்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், திரு. ஜார்ஜ் குரியன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 21 வது கால்நடை தரவு சேகரிப்புக்காக உருவாக்கப்பட்ட மொபைல் செயலியையும் மத்திய அமைச்சர்  தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் கால்நடைத் துறையின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அடிக்கோடிட்டுக் காட்டினார். கால்நடைகள் கணக்கெடுப்பை உன்னிப்பாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், சேகரிக்கப்பட்ட தரவுகள் எதிர்கால முன்முயற்சிகளை வடிவமைப்பதிலும், இத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். 2024 செப்டம்பர்-டிசம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள வரவிருக்கும்   கணக்கெடுப்புக்கு ஒருங்கிணைந்த மற்றும் திறமையான அணுகுமுறையை உறுதி செய்வதை இந்தப் பயிலரங்கு நோக்கமாகக் கொண்டது என்று மத்திய அமைச்சர்  தெரிவித்தார்.

பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், திரு ஜார்ஜ் குரியன் ஆகிய இணையமைச்சர்களும் பயிலரங்கில் உரையாற்றினர்.

இந்த பயிலரங்கில் 21வது கால்நடை கணக்கெடுப்புக்கான முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பற்றிய விரிவான அமர்வுகளுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.

எம்.பிரபாகரன்

Leave a Reply