தமிழகத்தில் பண்டைக்காலத்தில் நேர்மையான ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காக செங்கோல் நிறுவி ஆட்சி புரிந்தார்கள். உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது கலாச்சாரம்.
இதன் பிரதிபலிப்பாகவே நேர்மையான, நம்பிக்கையான, நடுநிலைமையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக உறுதி பூண்டு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
இன்று கூட நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கூட்டத்தில் இரு அவையின் உறுப்பினர்களும் அமரும் இடத்தில் செங்கோலை உயர்த்தி பிடித்து நடந்து வந்தது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறது.
அப்படி இருக்கும் போது செங்கோலை இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சி அகற்றக் கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழ் மரபின் செங்கோல் இந்திய சுதந்திரத்துக்கும், நல்லாட்சிக்கும் ஆதாரம் என்று தமிழர்கள் உணரும்போது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசும், தி.மு.க வும் செங்கோலுக்கு எதிரான சமாஜ்வாதி கட்சியின் கருத்தை ஏற்றுக்கொள்கிறதா.
சொங்கோல் சம்பந்தமான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் கருத்தை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டித்து, செங்கோல் படி நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா