அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகம், (சிஆர்ஆர்ஐ) வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் பிஹெச்டி கூட்டமைப்பு ஆகியவை எஃகு கழிவு கலந்த சாலை அமைத்தல் குறித்த முதலாவது சர்வதேச மாநாட்டிற்கு புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்தன. இதில் கலந்துகொண்ட நித்தி ஆயோக் (அறிவியல்) உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத், எஃகு கழிவைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், எஃகு தொழிற்சாலைகளின் கழிவுகளை நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் திறம்பட பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். எஃகு கழிவுகளைப் பயன்படுத்தி சாலை அமைத்தல், பராமரித்தல் ஆகியவற்றுக்கு இந்த வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், செலவு குறைவு, சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைத்தல், மேம்பட்ட சாலை அமைப்பு உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக டாக்டர் சரஸ்வத் தெரிவித்தார். “கழிவிலிருந்து செல்வம்” என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் சிஎஸ்ஐஆர்-சிஆர்ஆர்ஐ எஃகு கழிவு கலப்பு சாலை தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்3கிறது என்று அவர் கூறினார். மேலும், அகில இந்திய அளவில் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி செயல்படுத்துவதில் முன்மாதிரியான பங்களிப்பை வழங்கியதற்காக சி.ஆர்.ஆர்.ஐ இயக்குநர் டாக்டர் மனோரஞ்சன் பரிதா மற்றும் எஃகு கழிவு கலக்கும் சாலை தொழில்நுட்பத்தின் முதன்மை விஞ்ஞானியும், கண்டுபிடிப்பாளருமான திரு சதீஷ் பாண்டே ஆகியோரை அவர் பாராட்டினார்.
மத்திய எஃகு அமைச்சகத்தின் செயலாளர் திரு நாகேந்திர நாத் சின்ஹா பேசிய போது, எஃகு தொழிற்சாலைகள் அதன் சிறந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதாக கூறினார். கட்டுமானம், பராமரிப்பு பணிகளுக்காக நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 1.8 பில்லியன் டன், இயற்கை வளப் பொருட்கள் தேவைப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
திவாஹர்