தமிழக அரசு, மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் சாலை வசதிகளை செய்து கொடுத்து அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

மாநிலத்தில் பல மாவட்டப் பகுதிகளில் சாலைகள் பழுதடைந்துள்ளதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் பொது மக்களின் பயணத்தில் காலதாமதம் ஏற்படுகிறது.

குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல கிராமப்புற பகுதிகளுக்கு இன்னும் சாலை வசதியும், அரசுப்பேருந்து வசதியும் முழுமையாக இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்காக செல்லும் பொது மக்கள் ஆகியோர் பேருந்து வசதியின்றி நடைபயணம் மேற்கொள்கிறார்கள். அதாவது 100 பேர், 500 பேர், 1,000 பேர், 5,000 பேர் என எத்தனை பேர் வசிக்கும் ஊராக இருந்தாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் சாலைவசதியை செய்து கொடுத்து, அரசுப்பேருந்துகளை இயக்க வேண்டும். ஆனால் பல ஊர்களுக்கு இன்னும் அரசுப்பேருந்து இயக்கப்படவில்லை எனப் பொது மக்கள் குறை கூறுகின்றனர்.

இப்படி மாநிலத்தில் பல பகுதிகளில் பழுதடைந்த சாலை, சாலையில்லாத, பேருந்து வசதியில்லாத நிலை ஆகியவற்றால் அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிவேகப் பயணத்தாலும், பழுதடைந்துள்ள அரசுப்பேருந்துகள் இயக்கப்படுவதாலும், படிக்கட்டில் பயணம் செய்வதாலும் விபத்துகள், காயமடைதல், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கின்றன.

எனவே தமிழக அரசு, மாநிலம் முழுவதும் சாலைகளை செப்பனிடவும், புதிய சாலைகள் அமைப்பதற்கும், தரமான அரசுப்பேருந்தை இயக்குவதற்கும் காலம் தாழ்த்தாமல் கணக்கெடுப்பை மேற்கொண்டு சாலை இல்லாத ஊரில்லை, அரசுப்பேருந்து இயங்காத கிராமப்புறம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சாலைப்போக்குவரத்தில் உள்ள விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட 24 மணி நேர கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அரசுப்பேருந்து கழகங்களை தமிழக அரசே நடத்தி, போக்குவரத்துக்கழக ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அரசுப்போக்குவரத்துக் கழகங்களை இலாபகரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply