உலோக – கரிமக் கட்டமைப்புப் படிகங்களின் நெகிழ்வுத்தன்மை அடிப்படையிலான வழிமுறைகளின் ஆழமான பகுப்பாய்வை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் ஒரு படிகத்திற்குள் மென்மையான மற்றும் கடினமான அதிர்வுகளுடன் தொடர்புடைய பெரிய மறுசீரமைப்புகளுக்கு நெகிழ்வுத்தன்மையைக் காரணம் காட்டியுள்ளனர்.
உலோக – கரிமக் கட்டமைப்புகள் என்பது கரியமில வாயு போன்ற வாயுக்களை உறிஞ்சி அவற்றை சேமிக்கும் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்ட ஒரு பெரிய வகை படிகப் பொருட்களாகும். மேலும் அவை கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்கான வடிகட்டிகளாக செயல்படுகின்றன. நானோ துளைகளிலிருந்து அவை திறனைப் பெறுகின்றன. இதையொட்டி, அவை வாயுக்களை உறிஞ்சுவதிலும் சேமிப்பதிலும் திறமைமிக்கவையாக திகழ்கின்றன. இருப்பினும், வரையறுக்கப்பட்ட நிலைப்புத்தன்மை மற்றும் இயந்திர பலவீனம் ஆகியவை அவற்றின் பரந்த பயன்பாடுகளைத் தடுக்கின்றன.
இந்தப் பிரச்சினையை சமாளிக்கும் வகையில், பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கோட்பாட்டு அறிவியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் உமேஷ் வி.வாக்மாரே மற்றும் அவரது குழுவினர் சமீபத்தில் படிகங்களுக்கான இயந்திர நெகிழ்வுத்தன்மையின் ஒரு புதிய அளவை அறிமுகப்படுத்தினர். இது அடுத்த தலைமுறை நெகிழ்வுப் பொருட்களை அடையாளம் காண உதவும்.
“படிகப் பொருட்களின் உள்ளார்ந்த இயந்திர நெகிழ்வுத்தன்மையை அளவிடுதல்”, என்னும் அவர்களின் ஆய்வுக் கட்டுரை, இயந்திர நெகிழ்வுத்தன்மையின் தோற்றம் குறித்த அற்புதமான நுண்ணறிவுகளை முன்வைக்கிறது.
எம்.பிரபாகரன்