தற்சார்பு இந்தியா இலக்கை எட்டுவதில் கவனம் செலுத்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உள்ள அரசின் கொள்கைகள், முன்முயற்சிகளில் வெற்றிகரமான அமலாக்கத்தை அடுத்து 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு அமைச்சகம் வருடாந்தர பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் முன் எப்போதும் இல்லாத உயர் அளவை எட்டியுள்ளது.
பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பிற பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி 2023-24 நிதியாண்டில் சாதனை உயர் அளவாக ரூ.1,26,887 கோடி மதிப்புக்கு ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற நிதியாண்டைவிட (2023-24) 16.7 சதவீதம் அதிகமாகும்.
இந்த சாதனை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மேக் இன் இந்தியா திட்டம் புதிய மைல்கற்களைக் கடந்து வருகிறது என்று கூறியுள்ளார். 2023-24-ல் மேற்கொள்ளப்பட்ட மொத்த உற்பத்தி மதிப்பில், 79.2 சதவீதம் பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு என்றும் 20.8 சதவீதம் தனியார் துறை பங்களிப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியும் 2023-24 நிதியாண்டில் சாதனை அளவாக ரூ.21,083 கோடியை எட்டியுள்ளது என்பதையும் பாதுகாப்பு அமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா