பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!- சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு..!

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களைச் சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைவழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழகத்தில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்.

சென்னை-பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பௌத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார். பண்பாட்டுத் தளத்தில் பௌத்தமே மாற்று என்பதை முன்னிறுத்தியவர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி மாயாவதி அம்மையாரின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை – எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

************

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்
மறைவுக்கு இரங்கல்: தமிழகத்தில் சட்டம்
ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங், இன்று மாலை கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் பொதுவாழ்க்கைக்கு வந்த நாளில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடுமையாக உழைத்தவர். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான பொருளாதாரம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தவர். அவரால் கல்வி கற்று, சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்த இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளமாகும்.

மருத்துவர் அய்யா அவர்களின் நண்பரான கன்ஷிராம் அவர்களால் உருவாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். பட்டியலின மக்களுக்காக மருத்துவர் அய்யா அவர்கள் தொடக்க காலம் முதல் மேற்கொண்ட பணிகளை நன்றியுடன் அடிக்கடி நினைவு கூறும் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், மருத்துவர் அய்யா அவர்கள் தான் பட்டியலின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட தலைவர் என்பதையும் பல தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அம்பேத்கரின் சிலைகளை தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் திறந்த தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்பதால் அவர் மீது தாம் மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் பல இடங்களில் பேசியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் உயர்ந்த பதவிகளுக்கு வரவேண்டியவர். வயதில் மிகவும் இளையவரான அவர், தமிழக அரசியலில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நான் உறுதியாக நம்பினேன். தொடர்வண்டி தொழிற்சங்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் என்னுடன் ஒன்றாக கலந்து கொண்டவர். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றவர் ஆம்ஸ்ட்ராங். அப்படிப்பட்டவர் திடீரென ஒரு நாள் மாலைப் பொழுதில் கூலிப்படையினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவு வளர்ச்சி சார்ந்த தலித் அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். அப்படிப்பட்ட ஒருவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஓர் அரசியல் கட்சித் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏதேனும் இருக்கிறதா? அவருக்கு எதிராக சதி வேலைகள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட தலைவரை எச்சரிக்க வேண்டியதும், சில தருணங்களில் அவரது பாதுகாப்புக்கு அவருக்கே தெரியாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் உளவுத்துறையின் கடமை. ஆனால், உளவுத்துறை செயலிழந்து விட்டது என்பதையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை காட்டுகிறது.

கடந்த சில நாட்களில் கடலூரிலும், சேலத்திலும் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் நடந்த கொலைக்கு திமுகவினர் காரணமாக இருந்துள்ளனர். அவற்றின் தொடர்ச்சியாக இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கு இந்த அளவுக்கு சீர்குலைந்திருப்பதற்கு காவல்துறையை தம்மிடம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பெயரளவில் மட்டுமே அப்பொறுப்பில் இருப்பதும், அவரைச் சுற்றியுள்ள சக்திகள் தான் முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்கின்றன என்பதும் தான் நிலைமை மோசமடைவதற்கு காரணமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

*****************

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள், இன்று சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் தமிழக பாஜக ஆறுதலாகத் துணை நிற்கிறோம்.

நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, திரு முக ஸ்டாலின் அவர்கள் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply