பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் புதுதில்லியில் நிறைவடைந்தன.

மத்திய நிதித்துறை, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதி அமைச்சகம் சார்பில்  2024, ஜூன் 19 அன்று தொடங்கிய, 2024-25 க்கான மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள்  2024,  ஜூலை  5 அன்று நிறைவடைந்தன.

இந்த ஆலோசனைக் கூட்டங்களின் போது, 10 குழுக்களைச் சேர்ந்த 120-க்கும் அதிகமான அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.   விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள், கல்வித் துறையினர், சுகாதாரத் துறை வல்லுநர்கள், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு வல்லுநர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினர், வர்த்தகம் மற்றும் சேவைகள் தொழில் துறையினர், பொருளாதார நிபுணர்கள், நிதித் துறை, மூலதனச் சந்தைகளின் நிபுணர்கள்,  உள்கட்டமைப்பு, எரிசக்தி,   நகர்ப்புற துறை பிரதிநிதிகள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் திரு அஜய் சேத், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயலாளர்கள், தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன், மூத்த அதிகாரிகள்  இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதிப்புமிக்க ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டதற்காகப் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த மத்திய நிதியமைச்சர் திருமதி சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டைத் தயாரிக்கும்போது இக்கூட்டத்தில் பெறப்பட்ட பரிந்துரைகள் கவனமாக பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

திவாஹர்

Leave a Reply