தமிழக அரசு ஆட்சி அதிகாரத்தை திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்துவதில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் மிகவும் மோசமாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
காரணம் தி.மு.க பிரமுகர், அ.தி.மு.க பிரமுகர், காங்கிரஸ் பிரமுகர்,பா.ம.க. பிரமுகர், வி.சி.க பிரமுகர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.
அதாவது தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, பொது மக்களைப் பாதுகாக்க, அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை என ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாக்க தவறிவிட்டது.
அது மட்டுமல்ல சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்திற்கு காரணமே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள். திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராய விற்பனை போன்ற சமூக விரோத செயல்களுக்கு அடிப்படைக்காரணமே சட்டம் ஒழுங்கு சரியாக, முறையாகப் பயன்படுத்தாதது தான்.
குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
அதே போல குற்றச்செயல்கள் நடைபெற்ற பிறகு அந்தக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதில் தாமதம், குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்திற்கு உட்பட்டு தண்டனை வாங்கிக்கொடுப்பதில் தாமதம், குற்றவாளிகளுக்கு ஆளும் கட்சியின் சிபாரிசுகள் – இப்படி இருந்தால் எப்படி சமூக விரோத செயல்பாடுகள் தொடராது.
தமிழகத்தில் தலைநகரம் சென்னை முதல், பல்வேறு மாவட்டத் தலைநகரம், நகரப் பகுதி, ஊரகப் பகுதி, கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள், கள்ளச்சாராயம் போன்ற சமூக விரோதச் செயல்கள் தொடர்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எனவே தமிழக அரசே, காவல் துறையே சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க தங்கள் துறையின் மூலம் முறையான, சரியான நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா