மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் ஆய்வுக் கூட்டத்தின் தொடக்க அமர்வில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார். மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி, செயலாளர் திரு சஞ்சய் குமார்; கூடுதல் செயலாளர்கள், திரு விபின் குமார் மற்றும் திரு ஆனந்த்ராவ் வி.பாட்டீல்; அமைச்சகத்தின் பிற அதிகாரிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதன்மைச் செயலாளர்கள், இயக்குநர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்இ ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், இந்தியா முழுவதும் பள்ளிக் கல்வியின் முழுமையான வளர்ச்சிக்கான அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான செயல் திட்டம் குறித்த தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்குப் பார்வையில் கல்வி முக்கிய தூணாக உள்ளது என்று கூறிய அவர், இந்த இலக்கை அடைய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தேசியக் கல்விக் கொள்கை அமலுக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நாட்டின் கல்விச் சூழல் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்தியாவை ஒரு அறிவுசார் வல்லரசாக மாற்றுவதற்கும், தரமான கல்வியை சமமான மற்றும் உள்ளடக்கிய அணுகலை செயல்படுத்துவதற்கும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது முக்கியமாகும் என்று அவர் கூறினார்.
இந்திய மொழிகளில் கல்வி குறித்து பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கை 2020 தாய்மொழி மற்றும் அனைத்து இந்திய மொழிகளிலும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்றார். புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை உணர்வான கல்வியில் அணுகல், சமத்துவம், தரம், கட்டுப்படியாகும் தன்மை, பொறுப்புணர்வை உறுதி செய்தல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியா ஒரு இளைய நாடு என்றும், வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் 21-ம் நூற்றாண்டில் உலகளாவிய குடிமக்களை உருவாக்குவதே நமது சவால் என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரு குழுவாக இணைந்து கல்விச் சூழலை வலுப்படுத்த வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து தரப்பினரும் திறன்களை வலுப்படுத்தவும், கூட்டுக் கல்வி முறையை உருவாக்கவும், வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் முக்கிய தூணாகக் கல்வியை மேம்படுத்தவும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பள்ளி ஆசிரியர்களுடன் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் உணர்வுபூர்வமான தொடர்பு குறித்தும், நமது கல்விச் சூழலை மேலும் துடிப்பானதாக மாற்றுவதில் ஆசிரியர்களின் திறன் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். திறன் அடிப்படையிலான கல்வி பற்றி பேசிய அவர், வேலைவாய்ப்பை அதிகரிக்க நமது திறன்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஜெயந்த் சவுத்ரி, தேசிய கல்விக் கொள்கை 2020 மிகவும் லட்சியமான மற்றும் முற்போக்கான கொள்கை ஆவணம் என்று கூறினார். ஒட்டுமொத்த பதிவு விகிதத்தை மேம்படுத்துவதும், அதை 100% ஆக மாற்றுவதும் மிகவும் முக்கியமானது என்றும், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் முறையான கல்வி அமைப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
திவாஹர்