கொவிட்-19 ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்ட விமான பயணச்சீட்டுக் கட்டணங்களை திருப்பித் தராதது தொடர்பாக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்தப் புகார்கள் தேசிய நுகர்வோர் உதவி எண் மூலம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது.
01.10.2020 அன்று இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான கட்டணங்கள் உடனடியாக முழுமையாக பணத்தைத் திருப்பி வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதன்படி ரத்து செய்யப்பட்ட விமான பயணச்சீட்டுக் கட்டணங்களை திருப்பித் தராதது தொடர்பாக யாத்ரா தளத்திற்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்துநடவடிக்கை எடுத்தது.
2021 ஆம் ஆண்டில், ரூ.26,25,82,484 மதிப்புள்ள 36,276 முன்பதிவு தொகைகள் திருப்பி வழங்கப்படாமல் இருந்தன. இந்தாண்டு ஜூன் 21-ம் தேதி நிலவரப்படி, இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து 4,837 முன்பதிவுகளுக்கு ரூ.2,52,87,098 மட்டுமே நிலுவையில் இருந்தது. யாத்ரா சுமார் 87% தொகையை நுகர்வோருக்கு திருப்பித் தந்துள்ளது. மேலும் நிலுவையில் உள்ள அனைத்து பணத்தையும் உடனடியாக திருப்பி வழங்க அந்தத் தளம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் நடவடிக்கைகள் காரணமாக மேக் மை டிரிப், ஈசி மை டிரிப், க்ளியர் டிரிப், இக்சிகோ, தாமஸ் குக் போன்ற பல பயண தளங்கள் முழுத் தொகையையும் திருப்பித் தந்துள்ளன.
நுகர்வோருக்கு பணத்தைத் திரும்பப் பெறுவதை சரியான நேரத்தில் செயலாக்குவதற்கு மேலும் வசதியாக, நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 27.06.2024 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் இது தொடர்பாக பிரத்யேக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு யாத்ரா தளத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்.பிரபாகரன்