திருநெல்வேலியிருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி ரயில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. கடும் போராட்டத்தின் பலனாக ஐந்து ஆண்டுகள் கழித்து 2017-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ரயில் நீட்டிப்பு செய்ததில் அப்போதைய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பங்கு மிக முக்கியமானது ஆகும்.
திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்வதற்கு முன்பு நாகர்கோவிலிருந்து காலை 7:30 மணிக்கு அடுத்து மாலை 5:30 மணிக்கு தான் திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தினசரி இரயில் வசதி இருந்து வந்தது. இதைபோல் மறுமார்க்கமாக மதுரை, திருச்சியிலிருந்து அதிகாலையிலிருந்து மதியம் வரை எந்த ஒரு தினசரி இரயில் வசதியும் இல்லாமல் இருந்து வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 1979-ல் ரயில் வந்ததிலிருந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் திருவனந்தபுரம் கோட்டம் சார்பாக இந்த மார்க்கத்தில் ரயில் இயக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் திருவனந்தபுரம் மார்க்கமாக மட்டும் அதிக கவனம் செலுத்தி அதிக ரயில்களை இயக்கியும் வந்தது. இந்த பகுதிகள் அனைத்தும் திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதாலேயே இந்த தடத்தில் புதிய இரயில்கள் இயக்க கோட்ட அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்ற கருத்து இந்த பகுதி மக்களிடம் பரவலாக உள்ளது. இதுதான் உண்மையும் கூட.
இவ்வாறு நீட்டிப்பு செய்யும் போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் முதலில் நிரந்தர நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் குறைந்தபட்சம் தற்காலிக நிறுத்தம் கூட கொடுக்கப்படவில்லை. இரணியல் ரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் நாகர்கோவில் ரயில் நிலையமும் மறுமார்க்கம் 15 கி.மீ தொலைவில் குழித்துறை ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த காலகட்டங்களில் குமரி மாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருந்தும் இந்த நிறுத்தம் ரயில்வே அதிகாரிகளால் அனுமதிக்கப்படவில்லை.
திருச்சி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் அறிவித்து இயக்கும் போது இந்த ரயில் இயங்கும் 456 கி.மீ தூரத்தில் திருச்சி முதல் மதுரை வரை உள்ள 156 கி.மீ மட்டுமே எந்த வித கிராசிங் இல்லாமல் இயங்கும் இருவழிப்பாதையாக இருந்து வந்தது. மீதமுள்ள மதுரை முதல் திருவனந்தபுரம் வரை உள்ள 300 கி.மீ தூரம் ஒரு வழிபாதையாக இருந்த காரணத்தால் கிராசிங் வேண்டி அதிக அளவில் இந்த ரயில் பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால் புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இவ்வாறு நிறுத்தம் அனுமதி கொடுத்தால் இந்த ரயில் சூப்பர் பாஸ்ட் என்ற அந்தஸ்தை இழந்துவிடும் என்ற காரணத்துக்காக ரயில்வேத்துறை மறுத்து வந்தது.
தற்போது நிலை மாற்றம் பெற்று நாகர்கோவில் டவுன் முதல் திருச்சி வரை அதாவது மொத்தம் உள்ள 456 கி.மீ தூரத்தில் 66 கி.மீ மட்டும் ஒரு வழி பாதையாகும் மீதமுள்ள 390 கி.மீ இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. இவ்வாறு இருவழிப்பாதையாக இருக்கின்ற காரணத்தால் கிராசிங் ஆக வேண்டி இந்த ரயில் ஒரு இடத்தில் நிற்க வேண்டியது இல்லை. இதனால் இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ரயிலுக்கு இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்க வேண்டும் என்று கல்குளம் தாலுகாவை சார்ந்த பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகையால் அடுத்த ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தொலைவை பார்க்ககூடாது. இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டிருந்தால் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று பிரிவாக பயணிகள் பயணம் செய்ய எளிதாக இருக்கும். ரயில்வேத்துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறுகின்றர்.
இரணியல் ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தில் வருவாய் அடிப்படையில் 27 இடத்தில் என்எஸ்ஜி பிரிவு-5-ல் உள்ளது.
பிரிவு – என்எஸ்ஜி -5
வருவாய் 2022-2023 – 4,97,76,708
பயணிகள் எண்ணிக்கை -4,11,405
தினசரி வருவாய் -1,36,375
ஒரு நாள் பயணிகள் எண்ணிக்கை-1,127
நின்று செல்லும் ரயில்களின் எண்ணிக்கை-24
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த ஒரு புதிய ரயிலும் இல்லை, புதிய நிறுத்தமும் இல்லை. ஆனால் அதற்கு மாறாக இருந்த ரயில்களை இழந்தும், இதற்கு முன்பு இருந்த ரயில் நிறுத்தத்தை இழந்து தான் இருக்கிறோம். கன்னியாகுமரியிலிருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த 16381/16382 ரயிலை புனே உடன் நிறுத்திவிட்டார்கள். 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் நாகர்கோவில் – மங்களுர் ஏரநாடு ரயிலும் திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி ரயில்வேத்துறை வளர்ச்சியில் புதிய ரயில்கள் இயக்க வேண்டும், புதிய நிறுத்தங்கள் வேண்டும் என்றால் குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கடுமையாக அழுத்தம் மற்றும் முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே கிடைக்கும். இல்லாமல் ரயில்வே அமைச்சரை பார்த்து மனு கொடுப்பது தெற்கு ரயில்வே பொது மேலாளரை பார்த்து மனு கொடுப்பது பாராளுமன்றத்தில் விவாதங்களில் பேசுவதெல்லாம் வேலைக்கு உதவாது. இதை குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து தமது நடவடிக்கைகளில் மாற்றம் வேண்டும். இனி காலம் கடந்து விட்டது. ரயில்வே வாரியத்தில் உள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து எனது தொகுதிக்கு இது தேவை என்று கூறி இது நிறைவேற்றாமல் நான் இங்கிருந்து நகரமாட்டேன் என்று அந்த அலுவலகத்தின் முன்னால் போராட்டம் செய்தால் மட்டுமே இந்த இன்டர்சிட்டி ரயில் இரணியல் நிறுத்தம் கோரிக்கை ரயில்வே பரிசீலிக்கும். இவ்வாறு தான் கேரளாவை சார்ந்த எதிர்கட்சி எம்.பிகள் சாதித்து காட்டுகிறார்கள். இதனால் தேர்தலில் மக்கள் மீண்டும் மீண்டும் இது போன்றவர்களை தேர்வு செய்கின்றார்கள்.
திருவனந்தபுரம் – திருச்சி மார்க்கமாக பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040