மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,தாயின் பெயரில் ஒரு மரம் நடும் இயக்கத்தின் கீழ் இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் .

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (14.07.2024)  மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  தாயின் பெயரில் ஒரு மரக் கன்று  (ஏக் பெட் மா கே நாம்) நடும் இயக்கத்தின் கீழ் ஒரே நாளில் 11 லட்சம் மரக் கன்றுகளை நடவு செய்யும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக காலையில், திரு அமித் ஷா இந்தூரில் உள்ள பித்ரேஷ்வர் ஹனுமான் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். பித்ரேஷ்வர் ஹனுமான் கோவிலில் இந்தியாவிலேயே மிக உயரமான ஹனுமான் சிலை உள்ளது.

மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு யோசனைதான், நமது தாய் பூமிக்காக நமது தாயாரின் பெயரில் மரக் கன்றுகளை நடும் இயக்கம் என்று கூறினார். இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது அவர் தெரிவித்தார்.  மக்கள் இதில் பெருமளவில் பங்கேற்று தங்கள் தாய்க்கும் தாய் பூமிக்கும் மரியாதை செலுத்தி மரக் கன்றுகளை நட்டு வருவதாக அவர் கூறினார்.

தூய்மை, சுவையான உணவு வகைகள், நல்ல நிர்வாகம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது இந்தூர் என்று அவர் குறிப்பிட்டார்.  இனிமேல் இந்தூர் மரக்கன்று நடும் இயக்கத்திற்காகவும் புகழ்பெற்றுத் திகழும் என்று அவர் தெரிவித்தார்.  பொலிவுறு நகரம், மெட்ரோ நகரம், தூய்மையான நகரம், நவீன கல்வியின் மையம் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தூர், இனி பசுமை நகரம் என்றும் அழைக்கப்படும் என்று அவர் கூறினார்.

மாநில அரசு இந்தூரில் வசிக்கும் அனைவரையும் இந்த இயக்கத்துடன் இணைத்துள்ளது என்று அவர் கூறினார். 

நாட்டின் அனைத்து மத்திய ஆயுத காவல் படையினரையும் (சிஏபிஎஃப்) பாராட்டிய திரு அமித் ஷா, 2024 மே மாதத்திற்குள், அனைத்து மத்திய ஆயுதக் காவல் படையினரும் சேர்ந்து 5 கோடி மரக் கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் ஆனால், அந்த இலக்கு முன்பே எட்டப்பட்டு விட்டதாகவும் கூறினார். இதுவரை, அனைத்து மத்திய ஆயுத காவல் படையினரும் 5.2 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 1 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இப்போது இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை நிலவுவதாக அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கியுள்ள, தாயின் பெயரில் மரக் கன்று நடும் இயக்கம் பருவநிலை மாற்றப் பிரச்சினையை எதிர்கொள்ள முக்கியப் பங்காற்றும் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ், மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply