மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒப்பந்தங்களில் நிலக்கரி அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஏலத்தின் 7-வது சுற்றின் இரண்டாவது பகுதியின் கீழ் மூன்று நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்திற்காக நிலக்கரி சுரங்க மேம்பாடு, உற்பத்தி ஒப்பந்தத்தில் நிலக்கரி அமைச்சகம் இன்று கையெழுத்திட்டது. இது வர்த்தக நிலக்கரி  சுரங்கங்களின் வெற்றியில் சிறந்த மைல்கல்லாக உள்ளது. மூன்று சுரங்கங்களில், இரண்டு சுரங்கங்கள் பகுதி அளவும், ஒரு சுரங்கம் முழுமையாகவும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

மச்சகட்டா (திருத்தப்பட்ட) நிலக்கரி சுரங்கம், குடனாலி லுப்ரி நிலக்கரி சுரங்கம், சகிகோபால்-பி ககுர்ஹி நிலக்கரி சுரங்கம் ஆகியவற்றுக்காக இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. என்.எல்.சி. இந்தியா நிறுவனம், குஜராத் கனிம வள மேம்பாட்டுக் கழக நிறுவனம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியவை வெற்றிகரமான ஏலதாரர்களாக உள்ளனர்.

இந்த வர்த்தக ஏலத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.2,991.20 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 40,560  வேலைவாய்ப்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இந்த நிலக்கரி சுரங்கங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர மொத்தம் சுமார் 4,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.

இந்த முன்முயற்சி நிலக்கரித் துறையில் தற்சார்பை அடைவதற்கும், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக உள்ளது.

திவாஹர்

Leave a Reply