தொலைத்தொடர்புத்துறையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 6 ஆலோசனைக் குழுவினருடன், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, நடத்திய முதல் நாள் ஆலோசனை, ஆக்கப்பூர்வமாக அமைந்ததைத் தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார். இன்றையக் கூட்டத்தில் தொலைத்தொடர்பு சேவை வழங்குவோருக்கான ஆலோசனைக் குழுவினர், இணையதள சேவை மற்றும் கட்டமைப்பு வசதிகளை வழங்குவோருக்கான ஆலோசனைக் குழு, தொலைத் தொடர்புத்துறை சார்ந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கான ஆலோசனைக் குழுவினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் திரு சிந்தியா, தொழில்துறையினர் மற்றும் கல்வியாளர்களுடனான ஆலோசனைகளை தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த ஆலோசனைக் குழுவினர் தெரிவிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றம் தொடர்பான யோசனைகள், கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், இந்திய தொலைத்தொடர்புத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவும் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு தனிநபரும் தெரிவிக்கும் பிரச்சனைகள் குறித்து ஆழமாக விவாதித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுப்பதற்கான செயல் திட்டம் வகுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
திவாஹர்