இத்தாலியில் நடைபெற்ற ஜி 7 வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டிற்கு இடையே பல்வேறு நாடுகளின் அமைச்சர்களுடன் மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு நடத்தினார்.

இத்தாலியின் ரெஜியோ கலாப்ரியாவின் வில்லா சான் ஜியோவானியில் நடைபெற்ற ஜி-7 வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்றார். உலகளாவிய வர்த்தக உறவுகளை அதிகரிப்பது குறித்தும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்து குறித்தும் விவாதிக்க இந்த ஜி7 வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் ஒரு முக்கிய தளமாக அமைந்தது. கூட்டத்தின் இடையே, திரு பியூஷ் கோயல் பல்வேறு நாடுகளின் வர்த்தக அமைச்சர்களுடன் உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டார்.

இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு, சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சருமான அன்டோனியோ தஜானியுடனான கலந்துரையாடல்களின் போது, இரு அமைச்சர்களும் இருதரப்பு வர்த்தகம், முதலீடுகள், தொழில்துறை கூட்டு உற்பத்தி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர்.

ஐரோப்பிய ஆணையத்தின் செயல் துணைத் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸுடனான விவாதங்கள் இந்தியா-ஐரோப்பிய யூனியன் வர்த்தகம் – பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தின.

நியூசிலாந்தின் வர்த்தக அமைச்சர் திரு டோட் மெக்லேவுடன் பேச்சுவார்த்தை நடத்திய திரு கோயல், பரஸ்பர வளர்ச்சிக்கான இருதரப்பு வர்த்தகம் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இங்கிலாந்தின்  வர்த்தகத் துறை அமைச்சர் திரு ஜொனாதன் ரெனால்ட்ஸின் நியமனத்தை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த திரு பியூஷ் கோயல், இருதரப்பு பொருளாதார உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

ஜெர்மனியின் பொருளாதார விவகாரங்கள், பருவநிலை நடவடிக்கை துறை அமைச்சர் டாக்டர் ராபர்ட் ஹேபெக்குடன் திரு பியூஷ் கோயல் உரையாடுகையில், வளர்ந்து வரும் இந்திய-ஜெர்மன் வர்த்தக- பொருளாதார ஒத்துழைப்பை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்.

இந்த இருதரப்பு சந்திப்புகள், இந்தியாவின் வர்த்தக உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply