பிரதமர் திரு நரேந்திர மோடி பரிந்துரைத்த ‘வசுதைவ குடும்பகம்’ தத்துவம் மற்றும் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ கொள்கை ஆகியவற்றுடன் இணைந்து, நல்லாட்சிக்கான தேசிய மையம் 2024 ஜூலை 15 முதல் 20 வரை பங்களாதேஷின் 16 துணை ஆணையர்களுக்கான பொதுக் கொள்கை மற்றும் ஆளுமை குறித்த அதன் முதன்மையான ஒரு வார சிறப்பு திறன் வளர்ப்பு திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல்துறை (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் கலந்துரையாடும் வாய்ப்பை துணை ஆணையர்கள் பெற்றனர்.
அதிகாரிகளிடையே உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், பொதுவான சவால்களை எதிர்கொள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் அறிவை பரிமாறிக் கொள்வதன் பரஸ்பர நன்மைகளை எடுத்துரைத்தார். பிரதமர் வீட்டுவசதித் திட்டம், ஆயுஷ்மான் பாரத் போன்ற இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாட்டு வெற்றியை அவர் சுட்டிக்காட்டினார்.
‘வளர்ந்த பாரதம் @ 2047’, ‘ஸ்மார்ட் பங்களாதேஷ் விஷன் 2041’ ஆகியவற்றின் பார்வைகளுடன் இணைந்து, திறன் வளர்ப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்களுக்கு இடையிலான இணைப்புகளில் கவனம் செலுத்தி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ கொள்கையின் மூலம் இந்தோ-பங்களாதேஷ் உறவுகளை வலுப்படுத்துவதை அவர் பாராட்டினார்.
1,500 அரசு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2025 க்குள் கூடுதலாக 1,800 அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்த பங்களாதேஷ் அரசுடன் நல்லாட்சி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்றுவரை, வெளியுறவு அமைச்சகத்தின் ஆதரவுடனும், டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடனும், பங்களாதேஷைச் சேர்ந்த சுமார் 2,650 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
திவாஹர்