இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-25 ஆம் ஆண்டில் 6.5 –க்கும் 7 சதவீதத்திற்கும் இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 ஆம் நிதியாண்டில் 8.2 சதவீதமாக வளர்ச்சியடைந்தது.
2024 ஆம் நிதியாண்டில் விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளின் பங்குகள் முறையே 17.7 சதவீதம், 27.6 சதவீதம் மற்றும் 54.7 சதவீதமாக இருந்தன.
2024 ஆம் நிதியாண்டில், உற்பத்தித் துறை 9.9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. கட்டுமானப் பணிகளும் 9.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன
சில்லறைப் பணவீக்கம் 2023 ஆம் நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதமாக இருந்தது. இது 2024-ல் 5.4 சதவீதமாகக் குறைந்தது.
தனியார் நிதி அல்லாத நிறுவனங்களின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 2023-ல் 19.8 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. இது வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக கருதப்படுகிறது.
எட்டு பெரிய நகரங்களில் 4.1 லட்சம் குடியிருப்புகள் விற்கப்பட்டுள்ளதால், 2023 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் 33 சதவீத ஆண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது 2013 க்குப் பிறகு மிக அதிகமான விற்பனையாகும்.
மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 2023 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதத்திலிருந்து 2024 ஆம் நிதியாண்டில் 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2024-ஆம் நிதியாண்டுக்கான மூலதன செலவு 9.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 28.2 சதவீதம் அதிகரிப்பாகும்.
மொத்த நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கான ரூ .9.1 லட்சம் கோடியை விட 8.6 சதவீதம் குறைவாக இருந்ததால் மாநில அரசுகளின் செலவினங்களின் தரம் மேம்பட்டது.
2024 மார்ச் மாதத்தில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.8 சதவீதமாகக் குறைந்தது. 12 ஆண்டுகளில் இது மிகக் குறைந்த அளவாகும்.
இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 2024 ஆம் நிதியாண்டில் 341.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
2024 மார்ச் மாத நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பு 11 மாத திட்டமிடப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்டப் போதுமானதாக இருந்தது.
2013 ஆம் ஆண்டில் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ரூ .36.9 லட்சம் கோடி வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
2017-18 ஆம் ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம், 2022-23 ஆம் ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு கிராமப்புற பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதே முக்கிய காரணமாகும்.
எம்.பிரபாகரன்