தமிழக முதலமைச்சர் அவர்கள் வருகின்ற சனிக்கிழமை அன்று புது டெல்லியில் நடைபெற இருக்கின்ற நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வாக்களித்து ஆட்சியில் அமரவைத்த வாக்காளர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
முதலமைச்சர் என்ற முறையில் ஏற்கனவே அறிவித்தபடி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கான நிதி தேவையை கேட்பது அவரது கடமை.
மத்திய பட்ஜெட்டில்- தமிழ்நாடு புறக்கணிப்பு என்று தமிழக முதல்வர் கூறியது ஏற்புடையதல்ல.
காரணம் மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு திட்டங்களை கொடுத்து அதற்கான நிதியை மத்திய அரசின் தொகுப்பு நிதியில் இருந்து ஒதுக்குகிறது.
குறிப்பாக தமிழகம் கடந்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது கூட மத்திய அரசு 2 தவணையாக நிதியை ஒதுக்கியது.
மேலும் வரும் காலங்களிலே தமிழகத்தின் தேவைக்கு ஏற்றவாறு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டும்.
இருப்பினும் தற்போது மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எதிர்பார்த்த நிதி ஒதுக்கவில்லை என்றால் அதனை தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரடியாக பாரதப் பிரதமர் அவர்களிடமோ, மத்திய நிதி அமைச்சர் அவர்களிடமோ, நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்துவது கடமை.
அரசியல் காரணத்திற்காக தமிழக முதல்வர் அவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்ப்பது வாக்களித்த மக்களை புறக்கணிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது.
எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா