2030-ம் ஆண்டுக்குள் தோல் மற்றும் காலணி தொழிலை 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த மத்திய அரசு திட்டம்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் தோல் மற்றும் காலணி தொழில்துறையினருடன் பங்குதாரர்கள் கலந்துரையாடல் புதுதில்லியில் நேற்று நடைபெற்றது. 2030 ஆம் ஆண்டுக்குள் தோல் மற்றும் காலணி தொழிலை 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்தவும், இந்தத் தொழில்துறையை மேம்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

நுகர்வோருக்கான பொருளின் தரத்தை உறுதி செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற பிராண்டை மேம்படுத்தவும் தரக் கட்டுப்பாட்டு ஆணைகளின் முக்கியத்துவத்தை திரு கோயல் எடுத்துரைத்தார்.

2024 ஆகஸ்ட் 1 முதல் தோல் மற்றும் காலணி துறைக்கான தரக்கட்டுப்பாட்டு  ஆணைகளை அமல்படுத்துவது, தோல் மற்றும் காலணி தொழில் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் இந்த கலந்துரையாடலில் இடம்பெற்றன.

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தோல் ஏற்றுமதி கவுன்சில் ,மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில், இன்வெஸ்ட் இந்தியா, இந்தியத் தர நிர்ணய அமைப்பு போன்றவற்றின் பிரதிநிதிகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

பூமா, நைக், அடிடாஸ், ரீபோக், பாட்டா, ஸ்கெச்சர்ஸ், லிபர்ட்டி, மெட்ரோ ஷூஸ், ரெட் டேப், ரிலையன்ஸ் போன்ற சில முக்கிய காலணி தயாரிப்பு தொழில்துறை தலைவர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.                                                         தோல், தோல் ஆடைகள், தோல் கையுறைகள், பைகள், பெட்டிகள், தோல் காலணிகள், தோல் அல்லாத காலணிகள் போன்ற பல்வேறு தயாரிப்பு பிரிவுகளில் இந்தியா உற்பத்தி செய்வதோடு ஏற்றுமதியும் செய்து வருகிறது

இந்திய தோல் மற்றும் காலணி தொழிலில் “மேக் இன் இந்தியா” மற்றும் “தற்சார்பு இந்தியா” என்ற தொலைநோக்குடன் தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் செயல்படுத்தப்படுவதை தொழில்துறை வரவேற்கும் என்று  நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply