நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.11,294.80 கோடி நிதி ஒதுக்கீடு.

நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ரூ.11,294.80 கோடி நிதிய  ஒதுக்கியுள்ளதாக  மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், அவர் இதனைக் கூறினார்.

இதன்படி  தமிழ்நாட்டுக்கு ரூ.433.79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதில் ரூ.398.89 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.71.95 கோடியில், ரூ.65.41 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: 

நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முதன்மைப் பொறுப்பு மாநில அரசுகளைச் சார்ந்ததாகும். நீதித்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான மத்திய நிதியுதவித் திட்டத்தின்  மூலம் மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு பூர்த்தி செய்கிறது. இத்திட்டத்தின் கீழ், நீதிமன்றக் கூடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்பு அலகுகள், வழக்குரைஞர் அரங்குகள், கழிப்பறை வளாகங்கள், மின்னணு கணினி அறை ஆகியவை கட்டப்படும். மேலும், தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, மத்திய அரசு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ஒட்டுமொத்தமாக நிதியை வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் நீதித்துறை உள்கட்டமைப்பின் முன்னேற்றம் நியாய விகாஸ் வலைதளம் 2.0 மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த போர்ட்டலில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 15.07.2024 நிலவரப்படி, திட்டத்தின் கீழ் 420 முன்மொழியப்பட்ட திட்டங்கள் உள்ளன.

இத்திட்டம் தொடங்கப்பட்ட 1993-94 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மத்திய அரசின் பங்காக ரூ.11294.80 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 20.07.2024 வரை ரூ.10,489.14 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. 20.07.2024 அன்றைய நிலவரப்படி 20,414 நீதிபதிகள் / நீதித்துறை அலுவலர்கள் பணிபுரியும் நிலையில், மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்களில் 23,079 நீதிமன்ற அரங்குகள் மற்றும் 20,890 குடியிருப்பு அலகுகள் உள்ளன.

திவாஹர்

Leave a Reply