கார்கில் வெற்றி தினத்தை பிரதமர் லடாக் பயணம் போரில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். போரில் உயிர்த்தியாகம் புரிந்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கார்கில் போர் குறித்து கேட்டறிந்த பிரதமர், அழியாத நினைவு குடிலையும், வீர பூமியையும் பார்வையிட்டார்.

லடாக்கில் ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தின் பணிகளை பிரதமர் காணொலி மூலம் இன்று பார்வையிட்டார். ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டம் லேவுக்கு அனைத்து பருவ காலத்திலும் இணைப்பை வழங்குவதற்காக நிமு – படும் – தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படவுள்ளது.   இது 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை-குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது.

ஸ்ரீ அஞ்சலி சமரோஹ் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கார்கில் வெற்றி தினத்தின் 25-வது ஆண்டுக்கு சாட்சியாக லடாக் பகுதி திகழ்கிறது என்று கூறினார். “கார்கில் வெற்றி தினம் நாட்டிற்காக செய்யப்பட்ட தியாகங்கள் அழியாதவை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். மாதங்கள், ஆண்டுகள், தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகள் கடந்துவிட்டாலும், நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்கள் பற்றிய நினைவுகளை அழிக்க முடியாது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். “நமது ஆயுதப்படைகளின் வலிமைமிக்க வீரர்களுக்கு தேசம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.

கார்கில் போர் நாட்களை நினைவு கூர்ந்த பிரதமர், அந்தக் காலத்தில் வீரர்களுடன் இருந்தது தமது அதிர்ஷ்டம் என்று கூறினார். இவ்வளவு உயரத்தில் நமது வீரர்கள் எவ்வாறு கடினமான பணியை மேற்கொண்டார்கள் என்பதை இன்னும் நினைவில் வைத்திருப்பதாக அவர் கூறினார். “தாய்நாட்டைப் பாதுகாக்க மிக உயர்ந்த தியாகம் செய்த நாட்டின் துணிச்சலான புதல்வர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்” என்று திரு மோடி கூறினார்.

“கார்கிலில், நாம் போரை வென்றதுடன் மட்டுமல்லாமல், ‘உண்மை, கட்டுப்பாடு, வலிமை’ ஆகியவற்றின் வியப்பூட்டும் உதாரணத்தை நாம் முன்வைத்தோம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அமைதியை நிலைநாட்ட இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் நேரத்தில் பாகிஸ்தானின் வஞ்சகத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். “பொய்யும் பயங்கரவாதமும் உண்மையால் மண்டியிட வைக்கப்பட்டன” என்று அவர் மேலும் கூறினார்.

பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர், பாகிஸ்தான் எப்போதுமே கடந்த காலங்களில் தோல்வியைச்  சந்தித்துள்ளது என்றார். பாகிஸ்தான் தனது கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை.  பயங்கரவாதம் மற்றும் மறைமுக போர்கள் என்ற போர்வையில் தொடர்ந்து போர் நடத்தி வருகிறது” என்று திரு மோடி கூறினார். பயங்கரவாதிகளின் தீய நோக்கங்கள் ஒருபோதும் நிறைவேறாது என்று பிரதமர் உறுதிபடக் கூறினார். “நமது துணிச்சலான வீரர்கள் அனைத்து பயங்கரவாத முயற்சிகளையும் காலில் போட்டு மிதிப்பார்கள்” என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply