மத்திய புவி அறிவியல் அமைச்சகம் 18-வது நிறுவன தினத்தை கொண்டாடியது.

மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அதன் 18-வது நிறுவன தினத்தை இன்று (27-07-2024) அதன் பிரித்வி பவன் தலைமையகத்தில் கொண்டாடியது. 

2006 ஜூலை 27-ல் நிறுவப்பட்ட புவி அறிவியல் அமைச்சகம், புவி அறிவியல் ஆராய்ச்சி, சேவைகளில் முன்னணியில் உள்ளது. இந்த அமைச்சகத்தின் சாதனைகள் புவி அமைப்பு அறிவியலின் அனைத்து துறைகளிலும் உள்ளன: காற்று அல்லது வளிமண்டலம், நீர் அல்லது நீர்க்கோளம், நிலம் அல்லது பாறைக்கோளம், திட பூமி என அனைத்திலும் இந்த அமைச்சகத்தின் பணிகள் உள்ளன.

புவி அறிவியல் அமைச்சகத்தின் 18-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினரை வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்.  

புவி அறிவியல் அமைச்சகம் அதன் 18 வது நிறுவன தினத்தை நினைவுகூரும் வகையில் சில வெளியீடுகளையும் வெளியிட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் துணை அலுவலகமான இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி), ‘இந்தியாவில் சூறாவளி எச்சரிக்கை குறித்த நிலையான செயல்பாட்டு நடைமுறை’, ‘அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வானிலை நிகழ்வுகளைக் கண்காணித்து  முன்னறிவிப்பதற்கான திறன் கட்டமைப்பு’ ஆகியவை வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்கள் பேரிடர் தடுப்பு முயற்சிகளுக்கு உதவும்.

இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான கோவாவின் துருவ, பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCPOR), இந்தியாவின் முதல் குளிர்கால ஆர்க்டிக் பயணத்தை 2023 டிசம்பர் 18 அன்று தொடங்கியது உட்பட இந்திய ஆர்க்டிக் பயணம் (2023-24) குறித்த ஒருங்கிணைந்த அறிக்கையை வெளியிட்டது. ஆர்க்டிக் பயணத்தின் கீழ் நடத்தப்பட்ட அறிவியல் திட்டங்கள், கள நடவடிக்கைகள் குறித்த ஆழமான தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது. இது என்சிபிஓஆர் இணையதளத்தில் கிடைக்கிறது.

புவி அறிவியல் அமைச்சகத்தின் செய்திகள், நிகழ்வுகள், புதுப்பிப்புகளை முன்னிலைப்படுத்தும் காலாண்டு வெளியீடான செய்திமடலின் முதல் இதழும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

வானிலை, பருவநிலை, பெருங்கடல், கடலோர நிலைகள், நீரியல், நில அதிர்வு, இயற்கை அபாயங்கள் ஆகியவை தொடர்பான முன்னறிவிப்பு சேவைகளை புவி அறிவியல் அமைச்சகம் வழங்குகிறது.  

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply