தமிழக முதலமைச்சர் அவர்களே, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் தொடர் கொலை, திருட்டு, போதைப்பொருள் பழக்கம் அதிகமாகி அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே முதலமைச்சர் அவர்களே காவல்துறையினரின் நடவடிக்கைகள், கண்காணிப்புகள் துரிதமானதாக அமைய தங்களின் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும்.
தமிழக தி.மு.க ஆட்சியில் நாள்தோறும் ஆங்காங்கே திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் கட்சியினர் மீதான தாக்குதல், கொலை அதிகரித்துள்ளது.
தற்போது ஒரே நாளில் அரசியல் கட்சியைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பத்திரிகை, தொலைக்காட்சியைப் பார்த்தால் போதைப்பொருள் பழக்கம், திருட்டு, கொலை, கொள்ளை, வன்முறைகள் தான் அன்றாடச் செய்தியாக, முக்கியச் செய்தியாக வெளிவருகின்றன.
மாணவர், இளைஞர், முதியோர், பெண்கள் என அனைத்து தரப்பினரும் சமூக விரோதிகளால் பாதிக்கப்படுவது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.
இதெல்லாம் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க அரசில் அரங்கேறியுள்ளது.
ஒரு புறம் சமூக விரோதச் செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது போதைப்பொருள் கலாச்சாரம் என்றால் மறுபுறம் சமூக விரோதிகளை அடையாளம் காண, கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க தவறும் அரசாக தமிழக அரசு செயல்படுவது தான்.
குறிப்பாக போதைப்பொருட்கள் பள்ளி, கல்லூரி வளாகத்தின் அருகிலேயும், பொது வெளியிலும் மிக எளிதாக கிடைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் காவல்துறையினரின் நடவடிக்கை என்ன, யாருக்கு ஆதரவாக இருக்கிறது. பணத்துக்காகவா, அரசியல் கட்சியினரின் சிபாரிசுக்காகவா என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் சர்வசாதாரணமாக கொலைகள் கொடூரமான முறையில் நடைபெறுவதால் சாதாரண மனிதர்களுக்கு மிகுந்த அச்சம் ஏற்படுகிறது.
எனவே தமிழக முதலமைச்சர் அவர்களே, தாங்கள் சட்டம் ஒழுங்கில் அதிக கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் போதைபொருட்களின் நடமாட்டத்தை அடியோடு அழிக்க, அரசியல் கட்சியினர் உட்பட பொது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள சட்டம் ஒழுங்கை கடுமையாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா