கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயனுடன் தொடர்பு கொண்டு பேசிய அவர், அங்கு நிலவும் சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“வயநாடு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ தற்போது மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. கேரள முதலமைச்சர் திரு @pinarayivijayan உடன் பேசினேன். மேலும் அங்கு நிலவும் சூழ்நிலையை அடுத்து மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தேன்”.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;
“வயநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ .2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்”.
திவாஹர்