திறன் மேம்பாட்டிற்கு, நாட்டின் முதலாவது பல்கலைக்கழகமான ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு ராஜ் நேரு இன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஸ்டார்ட் அப் முன்முயற்சிகள் குறித்தும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட புதுமையான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரிடம் அவர் விவரித்தார்.
பாரம்பரிய கல்வியிலிருந்து திறன் மேம்பாட்டை நோக்கி மாறுவதற்கும், வலுவான தொழில்துறை இணைப்புகளை உருவாக்குவதற்கும் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். வளர்ந்து வரும் பல்வேறு துறைகளில் வேலைக்கு தயாராக உள்ள மிகவும் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்குமாறு ராஜ் நேருவை கேட்டுக்கொண்ட அவர், இதுவே எதிர்காலம் என்றார். ரூ.1 லட்சம் கோடி கூட்டு மூலதன நிதியத்தை நிறுவுவதன் மூலம் அடுத்த தசாப்தத்தில் விண்வெளி பொருளாதாரத்தை ஐந்து மடங்கு விரிவுபடுத்துவதற்கான அரசின் திட்டத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்துறை – கல்வி இடையேயான இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர், வெற்றிகரமான நறுமண இயக்கம், ஊதா புரட்சி குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
பள்ளி மாணவர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு தொழில்துறை கூட்டாண்மை மூலம் நிதியையும் தேவையான ஆதரவையும் வழங்க ‘உஸ்தவ் அறக்கட்டளையை’ துணைவேந்தர் அறிமுகப்படுத்தினார். இந்த முயற்சியைப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங் இது வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா