தமிழக அரசு, தொடக்க கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு, 3 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்காக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர்.

தொடக்க கல்வி ஆசிரியர்கள் நீண்ட காலமாக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்தும் நிறைவேறவில்லை.

தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்ததால் நேற்று முன் தினம் முதல் ஆசிரியர்கள் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் 243 அரசாணையின் பாதிப்பு உள்ளிட்ட 31 கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தினர். ஆனால் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கைது செய்தது முறையல்ல.

இந்நிலையில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் உள்ளிட்ட 12 சங்கங்களின் பொருளாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இப்படி ஆசிரியர்களைப் போராட்டக் களத்திற்கு தள்ளுவதற்கு பதிலாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை.

மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கைகளுக்கு அரசு ஏற்கனவே செவி சாய்த்து நல்ல தீர்வு ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு கண்டு ஆசிரியர்களின் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply