புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 2, 2024) தொடங்கி வைத்தார். மத்திய-மாநில உறவுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் பரந்த அளவிலான பிரச்சினைகளை இந்த மாநாடு விவாதிக்கும்.
மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் நமது தேசிய இலக்குகளை அடைவதற்கு தீர்க்கமான விடயங்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த மாநாட்டின் விவாதங்கள் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு வளமான அனுபவமாக இருக்கும் என்றும், அவர்களின் செயல்பாட்டிற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் தொடக்க விழாவில் உரையாற்றினர். குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், ஆளுநர்களின் பதவிப் பிரமாணத்தை சுட்டிக்காட்டி, கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக நலத் திட்டங்கள் மற்றும் வியப்பூட்டும் வளர்ச்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையில், மத்திய மாநில அரசுகளுக்கிடையே பாலமாக செயல்பட வேண்டும் என்றும், நலிந்த பிரிவினருடன் இணைந்து செயல்படும் வகையில் மக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் ஆளுநர்களை வலியுறுத்தினார். ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, மாநில மக்களின் நலனில், குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளைப் பொறுத்தவரை, முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய ஒரு முக்கியமான நிறுவனம் என்று அவர் கூறினார். இரண்டு நாள் மாநாட்டில் நடைபெறவுள்ள விவாதங்களின் போக்கை விவரித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம் அளிக்கவும் துடிப்பான கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு ஆளுநர்கள் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குற்றவியல் நீதி பரிபாலனத்துடன் தொடர்புடைய மூன்று புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதி முறைமையின் புதிய யுகம் நாட்டில் ஆரம்பமாகியுள்ளதாக மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய குடியரசுத்தலைவர் தெரிவித்தார். இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களிலிருந்து நமது சிந்தனையில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
ஜனநாயகம் சுமூகமாக இயங்குவதற்கு, அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மத்திய முகமைகள் சிறந்த ஒருங்கிணைப்புடன் பணியாற்றுவது முக்கியம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அந்தந்த மாநிலங்களின் அரசியலமைப்பு தலைவர்கள் என்ற முறையில், இந்த ஒருங்கிணைப்பை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆளுநர்கள் சிந்திக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
திவாஹர்