தமிழக அரசு, கல்லணையில் இருந்து திறக்கும் நீரானது கடை மடைப்பகுதிக்கு சென்று சேரும் வகையில் அனைத்து ஆறுகளுக்கும், வாய்க்கால்களுக்கும் நீர் திறப்பை உறுதி செய்ய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நேற்று 01.08.2024, வியாழக்கிழமை, கல்லணையில் விவசாயத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் வருகின்ற உபரி நீர் அதிகப்படியான அளவில் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுகிறது.

பாசன ஆறுகளில் கல்லணை கால்வாய், வெண்ணாறு, காவிரி ஆகியவற்றில் மிகக் குறைந்த அளவே திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் கடைமடை பகுதி வரைக்கும் தண்ணீர் போய் சேருகிற வகையில் அனைத்து ஆறுகளிலும் போதிய அளவு முழு கொள்ளளவை திறந்து விட வேண்டும்.

மேலும் நிலத்தடி நீர்மட்டம் பெருகுவதற்கும், ஏரி குளங்களை நிரப்புவதற்கும். விவசாயம் செய்வதற்கும் ஏதுவாக உரிய அளவில் உடனடியாக அனைத்து ஆறுகளிலும், கிளை வாய்க்கால்களிலும் நீர் திறப்பை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் பல இடங்களில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுப்பதற்காக தண்ணீர் திறப்பதில் தாமதம் செய்வதாக விவசாயிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழக அரசு கல்லணை தண்ணீர் திறப்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாயத்திற்கு பயன் தரும் வகையில் தண்ணீரை காலம் தாழ்த்தாமல் திறந்து விட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply