ஆடி மாதத்தில் 18 வது நாளை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்கு!-Dr.துரைபெஞ்சமின்.

காவிரி ஆற்றில் வழிபாடு! இடம்: அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி. (3, ஆகஸ்ட் 2024)

கரைப் புரண்டு ஓடும் காவிரி, திருச்சிராப்பள்ளி.

ஆடிப்பெருக்கினைப் ”பதினெட்டாம் பெருக்கு” என்றும், ”ஆடிப்பதினெட்டு” என்றும் அழைக்கின்றனர். பொதுவாகத் தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை (விண்மீன்கள்) அடிப்படையாகக் கொண்டும், திதிகளை கொண்டும் நடத்தப்படுகிறது. ஆனால்ஆடி மாதத்தில் 18 வது நாளை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்காகும்.

தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ”ஆற்றுப்பெருக்கு” எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், செங்கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவைகள் தை பொங்கலுக்கு அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ”ஆடிப்பட்டம் தேடிவிதை” என்ற பழமொழியும் உருவானது.

ஆனால், காலபோக்கில் நதிகளில் போதிய நீர்வரத்து இல்லாதக் காரணத்தால், விளைநிலங்கள் அனைத்தும் வானம் பார்த்தப் பூமியானது. இதன் விளைவாக விளைநிலங்கள் பெரும் பகுதி வீட்டு மனைகளாகவும்; தொழிற்சாலை கட்டிடங்களாகவும் மாறிப்போனது.

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். திருக்கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்வர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைப்பார்கள். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து; பத்தி, கற்பூரம் தீப ஆராதனை காட்டி தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அது மட்டும் அல்லாமல் பல விதமான உணவுகள் செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் கல்யாண மாலைகளை பத்திரமாக கொண்டு வந்து ஆற்றில் விட்டு விட்டு; கணவன்- மனைவி இருவரும் பயபக்தியுடன் பூஜை செய்து வழிபடுவார்கள்.

குறிப்பாக காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்; தமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதல் காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா இன்று ஜெகஜோதியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, சேனப்பாடி-கரூர், பரமத்தி-வேலூர், குளித்தலை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், ஓயாமரி படித்துறை, கல்லணை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply