கோல் இந்தியா லிமிடெட், சமூகத்திற்கு சேவை செய்வதற்கான தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கொவிட் தொற்றுப் பாதிப்புக் காரணமாக பெற்றோரை இழந்து படிப்பைத் தொடர முடியாத 1645 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) முன்முயற்சியான சிஐஎல் ஆஷிஸ் (ஆயுஷ்மான் சிக்ஷா சஹாயதா) என்ற திட்டத்தை கோல் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன் கீழ் உதவித் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
பணியில் இருக்கும்போது குடும்ப உறுப்பினர்களை இழந்த 424 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் நியமனக் கடிதங்களையும் கோல் இந்தியா லிமிடெட் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை துன்பத்தில் உள்ள அந்தக் குடும்பங்களை ஆதரிக்கும்.
இந்த உதவித் தொகைகளும் பணி நியமனக் கடிதங்கள் இன்று (03-08-2024) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், வழக்குகளைத் தீர்ப்பதற்காக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை நடத்துவதற்கான ஒரு தனித்துவமான முயற்சி 2024 ஜூலை 29 முதல் 2024 ஆகஸ்ட் 03 வரை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு லோக் அதாலத் நிறைவு விழாவின் போது கோல் இந்தியாவின் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறப்பு நிகழ்ச்சியின்போது 25 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான மாதிரி காசோலைகளும், கருணை அடிப்படையில் பணி நியமனக் கடிதங்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் தனஞ்சய் ஒய் சந்திரசூட், மத்திய சட்டம் – நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரால் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள், நிலக்கரி அமைச்சகத்தின் பிரதிநிதிகள், சட்ட அமைச்சகத்தின் பிரதிநிதிகள், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சிஐஎல் ஆஷிஸ் திட்டத்தின் கீழ், தகுதியான குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 45,000/- மதிப்புள்ள உதவித்தொகை நான்கு ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் தங்கள் படிப்பை முடிக்கவும், அவர்களின் கனவுகளை அடையவும் முடியும். இக்குழந்தைகள் சரிபார்ப்பு ஆவணங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமூகத்திற்கு சேவை செய்வதில் கோல் இந்தியா லிமிடெட்ட நிறுவனத்தின் பங்களிப்பு இந்த நிகழ்வின் போது பெரிதும் பாராட்டப்பட்டது.
திவாஹர்