புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், “நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம்” என்பதாகிம். பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 65 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச மாநாடு (ICAE-ஐசிஏஇ) குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவைச் சேர்ந்த 12 கோடி விவசாயிகள், 3 கோடிக்கும் அதிகமான பெண் விவசாயிகள், 3 கோடி மீனவர்கள் மற்றும் 8 கோடி கால்நடை விவசாயிகள் சார்பில் அனைத்து பிரமுகர்களையும் வரவேற்பதாக அவர் கூறினார். 50 கோடிக்கும் அதிகமான கால்நடைகளைக் கொண்ட நாடு இந்தியா எனவும் விவசாயத்தையும் விலங்குகளையும் நேசிக்கும் இந்திய நாட்டிற்கு பிரதிநிதிகளை வரவேற்பதாகவும் பிரதமர் கூறினார்.
வேளாண்மை, உணவு குறித்த பண்டைய இந்தியர்களின் நம்பிக்கைகள் அனுபவங்களைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்திய வேளாண் பாரம்பரியத்தில் அறிவியலுக்கும், தர்க்கவியலுக்கும் அளிக்கப்படும் முன்னுரிமையை அவர் விளக்கினார். உணவின் மருத்துவ குணங்களுக்குப் பின்னால் அறிவியல் இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தத் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில்தான் விவசாயம் வளர்ந்துள்ளது என்று கூறிய பிரதமர், 2000 ஆண்டுகள் பழமையான விவசாயம் குறித்த நூலான ‘கிருஷி பராஷர்‘ என்ற நூலை மேற்கோள் காட்டினார். இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சிக்கும் வேளாண் கல்விக்குமான வலுவான அடித்தள அமைப்பு இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன என்றும் வேளாண் கல்விக்காக 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், 700-க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் மையங்களும் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் வேளாண் திட்டமிடுதலில் ஆறு பருவகாலங்களின் தொடர்பை எடுத்துரைத்த பிரதமர், 15 வேளாண் பருவநிலை மண்டலங்களின் தனித்துவமான பண்புகளைக் குறிப்பிட்டார். நாட்டில் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்தால் விவசாய விளைபொருட்கள் விளையும் தன்மை மாறும் என்று அவர் குறிப்பிட்டார். நிலம், இமயமலை, பாலைவனம், தண்ணீர் பற்றாக்குறை பகுதிகள் அல்லது கடலோரப் பகுதிகள் என பல வகையான வேளாண் பகுதிகள் இந்தியாவில் இருப்பதாகவும், இந்தப் பன்முகத்தன்மை உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார். இதுவே இந்தியாவை உலகின் நம்பிக்கை ஒளியாக ஆக்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
65 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற வேளாண் பொருளாதார வல்லுநர்களின் சர்வதேச மாநாட்டை நினைவு கூர்ந்த பிரதமர், அப்போது இந்தியா புதிதாக சுதந்திரம் பெற்ற நாடாக இருந்தது என்றும், அது இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயத்திற்கும் சவாலான நேரம் என்றும் குறிப்பிட்டார். இன்று இந்தியா உணவு மிகை நாடாகவும், பால், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள் உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை, தேயிலை, மீன் உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராகவும் உள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகிற்கு கவலை அளிக்கும் விஷயமாக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இன்று உலகளாவிய உணவு – ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு இந்தியா தீர்வுகளை வழங்கி வருவதை சுட்டிக் காட்டினார். எனவே, உணவு முறை மாற்றம் குறித்த விவாதங்களுக்கு இந்தியாவின் அனுபவம் மதிப்புமிக்கது என்று கூறிய பிரதமர், வளரும் நாடுகள் எனப்படும் உலகின் தென் பகுதியினருக்கு இது நிச்சயம் பயனளிக்கும் என்றார்.
எஸ்.சதிஸ் சர்மா