மத்திய அரசு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

மத்திய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கண்டிப்புடன் இலங்கை அரசுடன் பேசி, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

புதுக்கோட்டையில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்ததால் மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வருமானம் ஈட்ட முடியாமல் மீனவக்குடும்பங்கள் சிரமத்தில் உள்ளனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் மீனவ சமுதாயம் வேதனை அடைந்துள்ளது.

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலானது இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுவதால், வாழ்வாதாரமே இழக்கும் நிலை ஏற்படும்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், சிறைப்பிடித்தல், படகுகளை பறிமுதல் செய்தல், மீன்பிடிச்சாதனங்களை சேதப்படுத்துதல் போன்ற அராஜகச் செயல்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபடுவது நிறுத்தப்பட வேண்டும்.

எனவே மத்திய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கண்டிப்புடன் இலங்கை அரசுடன் பேசி, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply