தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை நிறுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, இலங்கை அரசுடன் உடனடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்!- ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

ஜி.கே.வாசன்.

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித்தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சென்றதும், படகுகளை பறிமுதல் செய்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 32 மீனவர்கள் 4 நாட்டு படகுகளில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 32 மீனவர்களை கைது செய்து, அவர்களின் 4 நாட்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவக் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் சரிவர நடைபெறாமல், வருமானம் ஈட்ட முடியாமல் மிகுந்த சிரமத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலை தொடரக்கூடாது.

குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 169 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், அவற்றை நம்பியுள்ள மீனவக்குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான கடற்படையினரின் கைது நடவடிக்கைக்கும், படகுகளை இலங்கை பறிமுதல் செய்வதற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு உடனடிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மத்திய அரசு தற்போது கைது செய்யப்பட்டுள்ள 32 தமிழக மீனவர்களையும், ஏற்கனவே இலங்கை வசம் உள்ள மீனவர்களையும் மற்றும் மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply