இந்திய கடற்படையின் 214 பெண் அக்னிவீரர்கள் உட்பட 1389 அக்னிவீரர்கள், 09 ஆகஸ்ட் 2024 அன்று ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா தளத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்றனர்.
அக்னிவீரர்களின் நான்காவது தொகுதிக்கான (01/24) பயிற்சி நிறைவு அணிவகுப்பு (POP) தனித்துவமாக நடைபெற்றது. இது 16 வார கடுமையான கடற்படை பயிற்சியின் முடிவைக் குறிப்பதாக அமைந்தது. கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் அணிவகுப்பை நடத்தும் அதிகாரிகளாக செயல்பட்டனர்.
இந்த அணிவகுப்பு ஆரம்ப பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பதை மட்டுமல்லாமல், இந்திய கடற்படையில் அக்னிவீரர்களுக்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. அணிவகுப்பில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, அணிவகுப்பில் பயிற்சி பெற்றவர்களை வாழ்த்தியதுடன், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் கடற்படையின் முக்கிய மதிப்புகளான கடமை, மரியாதை மற்றும் தைரியத்தை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அடுத்தடுத்த கட்ட பயிற்சியில் கவனம் செலுத்துமாறும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற கடல் வீரர்களாக மாறுமாறும் அக்னீ வீரர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
அந்தந்த பிரிவுகளில் சிறந்து விளங்கிய பயிற்சியாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
எம்.பிரபாகரன்