நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அவசியம் என்று மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறினார்.

மத்திய மகளிர்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை  அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, மாநிலங்களின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூக நலத்துறை அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நிர்வாகிகள் / துணை நிலை ஆளுநர்களுடன் தமது முதல் தேசிய அளவிலான கூட்டத்தை 10 ஆகஸ்ட் 2024 அன்று காணொலி  மூலம் நடத்தினார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்  கீழ் நடைமுறையில் உள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால உத்திகள்  பற்றி ஆய்வு செய்வதில் கவனம் செலுத்திய இக்கூட்டத்தில் 28 மாநில அமைச்சர்களுள் 21 பேர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தின் போது, திருமதி அன்னபூர்ணா தேவி, இந்த முயற்சிகளின் பயன்கள் அடிமட்டத்தை சென்றடைவதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அமைச்சகத்தின் முன்னோடி திட்டங்களை அவர் குறிப்பாக எடுத்துரைத்தார்.

திருமதி அன்னபூர்ணா தேவி கூறுகையில், “எங்கள் முயற்சிகளின் பலன்கள் அடிமட்டத்தை எட்டுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம், இதற்காக மாநிலங்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டியது அவசியம். இது மாநிலங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது மட்டுமல்லாமல், நமது நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும், இது பிரதமரின் பார்வைக்கு ஏற்ப ‘வளர்ந்த பாரதம்’ ஆகும்’’ என்று கூறினார்.

இந்த இயக்கங்களின் அமலாக்கத்தை மேம்படுத்த மத்திய அரசுடன் அனைத்து மாநில அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் / துணைநிலை ஆளுநர்கள் தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும் என்று திருமதி அன்னபூர்ணா தேவி வலியுறுத்தினார். வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கும், நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் இத்தகைய ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

அந்தந்த மாநிலங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் நல்வாழ்வுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் குறிப்பிட்ட முயற்சிகளை மாநிலங்களின் அமைச்சர்கள் எடுத்துரைத்தனர். மாநிலங்களில் மூன்று இயக்கங்களின் அமலாக்கத்திற்கு இது கூடுதல் உத்வேகத்தை அளிக்கும் என்று, தற்போது நடைபெற்று வரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். மத்திய அமைச்சர் தமது மட்டத்தில் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர்களுக்கு உறுதியளித்தார்.

உள்ளடக்கிய சூழலை ஊக்குவிப்பதற்கும், நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரமளித்தல் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்கும் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கும் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply