ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுதில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தலா 90 தொகுதிகளை கொண்ட ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதியும், ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்தார்.
இதன்படி, ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 24 தொகுதிகளில் இம்மாதம் 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 27-ம் தேதி மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். மறுநாள் 28-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற இம்மாதம் 30-ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
2-ம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள 26 தொகுதிகளில் இம்மாதம்
29-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கும். அடுத்த மாதம் 5-ம் தேதி மனுத்தாக்கலுக்கு கடைசி நாள். மறுநாள் செப்டம்பர் 6-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 9-ம் தேதி மனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும். இத்தொகுதிகளில் செப்டம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 40 தொகுதிகளில் செப்டம்பர் 5-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கி செப்டம்பர் 12-ம் தேதி வரை நடைபெறும். மறுநாள் 13-ம் தேதி வேட்புமனு பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 17-ம் தேதி கடைசி நாளாகும். இத்தொகுதிகளில் அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மூன்று கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படும்.
ஒரே கட்டத் தேர்தல் நடைபெறும் ஹரியானாவில் செப்டம்பர் 5-ம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது. 12-ம் தேதி மனுத் தாக்கலுக்கு கடைசி நாள். மறுநாள் 13-ம் தேதி வேட்புமனு பரிசீலனை மேற்கொள்ளப்படும். மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 16 கடைசி நாளாகும். இம்மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திவாஹர்