தமிழ்நாட்டில் காவல்துறை, சிறைத்துறை, தீயவிப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் சுனில்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரை பணியில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் நிலை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த இந்தப் பணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் என்பது மிகவும் பொறுப்பான பதவி ஆகும். காவல்துறை, தீயவிப்புத்துறை, சிறைத்துறை பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதற்கு ஆணையத்தின் தலைவர் தான் பொறுப்பேற்க வேண்டும். அத்தகைய சூழலில், ஆணையத்தின் தலைவராக இருப்பவர் பணியில் இருக்கும் அதிகாரியாக இருந்தால், அவரை பணியிடை நீக்கம் செய்வது, அவர் மீது வழக்குத் தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், ஓய்வு பெற்ற அதிகாரிக்கு எந்தவித பொறுப்புடைமையும் கிடையாது. பொறுப்புடைமையை நிர்ணயிக்க முடியாத அதிகாரி ஒருவரை இந்த பதவியில் எப்படி நியமிக்க முடியும்?
சீருடைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் பணிக்கு ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிக்கும் அளவுக்கு தமிழக காவல்துறையில் பொறுப்பான அதிகாரிகளுக்கு எந்த பஞ்சமும் இல்லை. தமிழக காவல்துறையில் டி.ஜி.பி. நிலையில் மொத்தம் 16 அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் மத்திய அரசுப் பதவிகளில் உள்ளவர்கள் தவிர, தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி நிலையில் உள்ள பல அதிகாரிகளுக்கு பொறுப்பான பதவிகள் வழங்கப்படவில்லை. அவர்களில் பலர் காவல் ஆய்வாளர் அல்லது காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகள் வகிக்கக் கூடிய கண்காணிப்பு அதிகாரி என்ற பணியில் மின்வாரியம் உள்ளிட்ட பல துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பணியை வழங்குவதை விடுத்து, ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டிய தேவை என்ன?
அதைவிட குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு செய்தி, சுனில்குமார் அவர்களை இந்தப் பதவியில் அமர்த்துவதற்காக ஏற்கனவே அந்த பதவியில் இருந்த சீமா அமர்வால் என்ற டி.ஜி.பி. நிலையிலிருந்த பெண் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்தது தான். சீமா அகர்வால் டி.ஜி.பி. நிலையிலான அதிகாரி. காவல்துறையில் அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர். அவரை இடமாற்றம் செய்வதற்கு எந்த தேவையும் இல்லை. ஆனால், அவரை இடமாற்றம் செய்தது மட்டுமின்றி, டி.ஜி.பி நிலையிலான பதவியில் அமர்த்துவதற்கு மாறாக சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி பிரிவின் டி.ஜி.பி. என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். பணியில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற இ.கா.ப. அதிகாரி ஒருவருக்கு பதவி வழங்குவதற்காக இத்தனை சமரசங்களையும், வளைப்புகளையும் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுனில்குமார், காவல்துறை பணியில் இருக்கும் போது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், வெளிநாடுகளில் அவருக்காக முதலீடு செய்ததாக கூறப்படும் தொழிலதிபர் ஒருவருக்கும் பாலமாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு சுனில்குமார் மீது உண்டு. அந்த அடிப்படையில் முந்தைய அதிமுக ஆட்சியின் போது, சுனில்குமாருக்கு நெருக்கடிகள் தரப்பட்டன. அதற்கு நன்றிக்கடனாகவே சுனில்குமாருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நன்றிக்கடனுக்காக பதவிகளை வழங்க அரசு பதவிகள் முதலமைச்சரின் குடும்பச் சொத்துகள் அல்ல. இது தவறான முன்னுதாரமான அமைந்துவிடும். இதை உணர்ந்து கொண்டு, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக சுனில்குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா