மாணவர்களே நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் கூட தொடர் முயற்சி, அடுத்தக்கட்ட கல்வி என கவனம் செலுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரை மாய்த்துக்கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் மனம் வருந்தி, உயிரை மாய்த்துக்கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் தாங்கள் எழுதும் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை, அதிக மதிப்பெண் பெறமுடியவில்லை என்றால் அதற்காக உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது.

தொடர்ந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற முயற்சிக்கலாம். அல்லது அடுத்தக்கட்ட கல்விக்கு முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்தால் தங்களுக்காக பாடுபட்ட பெற்றோர் மனம் நொந்து, மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக மாணவர்களே நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள், தேர்வு எழுதுங்கள் குறைந்த மதிப்பெண்ணோ, தோல்வியோ எக்காரணத்திற்காகவும் உயிரை மாய்த்துக் கொள்ள கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவச் செல்வங்களே உங்களுக்கு குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் துணையாக இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து, அடுத்த வாய்ப்புகள் உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையோடு உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்.

மாணவரை இழந்து வாடும் பெற்றோருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி‌.சுகுமார்

Leave a Reply