குடிமைப் பணிகள் தேர்வு 2022 முடிவு தொடர்பாக தவறான கூற்றுக்களை விளம்பரப்படுத்தியதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஸ்ரீராமின் ஐ.ஏ.எஸ் நிறுவனத்திற்கு ₹ 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தவறான விளம்பரம் செய்ததற்காக ஸ்ரீராமின் ஐ.ஏ.எஸ் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சி.சி.பி.ஏ) ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் விதிகளை மீறும் வகையில் எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகள் பற்றி தவறான  விளம்பரம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மீறப்பட்டதைக் கருத்தில் கொண்டு, தலைமை ஆணையர் திருமதி நிதி கரே மற்றும் ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா தலைமையிலான சி.சி.பி.ஏ, குடிமைப் பணி தேர்வு 2022 தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததற்காக ஸ்ரீராமின் ஐ.ஏ.எஸ் நிறுவனத்திற்கு  எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயிற்சி நிறுவனங்கள் மற்றும் இணையவழி கல்வி தொழில்நுட்ப தளங்கள் வருங்கால ஆர்வலர்களைக் (நுகர்வோர்) கவர, வெற்றிபெற்ற தேர்வர்களின் படங்கள் மற்றும் பெயர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றன. அத்தகைய தேர்வர்கள் தேர்ந்தெடுத்த படிப்புகள் மற்றும்  கலந்து கொண்ட பாடத்தின் நீளம் வெளியிடப்படுவதில்லை.

ஸ்ரீராமின் ஐ.ஏ.எஸ் தனது விளம்பரத்தில் பின்வரும் கூற்றுக்களை வெளியிட்டது-

“குடிமைப் பணி தேர்வு 2022 இல் 200 க்கும் மேற்பட்ட தேர்வுகள்”

“நாங்கள் இந்தியாவின் முதல் யு.பி.எஸ்.சி / ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனம்”

ஸ்ரீராமின் ஐ.ஏ.எஸ் நிறுவனம் பல்வேறு வகையான படிப்புகளை விளம்பரப்படுத்தியது, ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட தேர்வு முடிவுகளில் விளம்பரப்படுத்தப்பட்ட வெற்றியடைந்த தேர்வர்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி தொடர்பான தகவல்கள் வேண்டுமென்றே விளம்பரத்தில் மறைக்கப்பட்டதை சி.சி.பி.ஏ கண்டுபிடித்தது. நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட  வெற்றிபெற்ற தேர்வர்களும் அதன் இணையதளத்தில் நிறுவனம் விளம்பரப்படுத்திய கட்டணப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்ததாக நுகர்வோர் தவறாகப் புரிந்துகொள்ளும் விளைவை இது ஏற்படுத்துகிறது.

குடிமைப் பணித் தேர்வு 2022 இல் 200 க்கும் மேற்பட்ட தேர்வுகள் என்ற கூற்றுக்கு எதிராக, ஸ்ரீராமின் ஐ.ஏ.எஸ் நிறுவனம் தனது பதிலில் 171 வெற்றி பெற்ற தேர்வர்களின் விவரங்களை மட்டுமே சமர்ப்பித்தது. இந்த 171 தேர்வர்களில், 102 பேர்  கட்டணமில்லா நேர்காணல் வழிகாட்டுதல் திட்டத்தில் (ஐ.ஜி.பி) பயின்றவர்கள், 55 பேர் இலவச டெஸ்ட் தொடர் திட்டத்திலும், 9 பேர் ஜி.எஸ் வகுப்பறை படிப்பிலும் பயின்றவர்கள் மற்றும் 5 பேர் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் (இலவச பயிற்சி அளிப்பதற்காக பல்வேறு மாநில அரசுகளுக்கும் பயிற்சி நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ்). இந்த உண்மை அவர்களின் விளம்பரத்தில் இடம்பெறாமல்,  நுகர்வோரை ஏமாற்றினர்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தேர்வின் 3 நிலைகளிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதாவது, முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள் மற்றும் ஆளுமைத் தேர்வு (பி.டி).  ஸ்ரீராமின் ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், பெரும்பான்மையான வேட்பாளர்கள் ஏற்கனவே முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வில் தாங்களே தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த முக்கியமான உண்மையை மறைப்பதன் மூலம், குடிமைப் பணி தேர்வில் ஏற்கனவே முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே ஸ்ரீராமின் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது என்பதை தெரியப்படுத்தாமல், இதுபோன்ற தவறான  விளம்பரங்கள்  தேர்வர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன..

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply