தமிழக அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு – அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களுக்கு 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்கி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த காலம் 3 ஆண்டுகளாக இருந்ததை தற்போதைய தமிழக அரசு 4 ஆண்டுகளாக மாற்றியும், கடந்த 01.09.2023 முதல் அமுலுக்கு வர வேண்டிய ஊதிய உயர்வு இதுநாள் வரையிலும் பேசி தீர்க்கவில்லை. தொழிலாளர் ஆணையம் மேற்படி 15 வது ஊதிய ஒப்பந்தம் 27.08.2024 அன்று துவக்கி பேசி தீர்க்க வேண்டும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இதற்கான அழைப்பை தொழிற்சங்களுக்கு அனுப்ப வேண்டும். அதைத் தான் தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில் தொழிலாளர் ஆணைய அறிவிக்கைப்படி 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஏற்கனவே குறிப்பிட்ட தேதிப்படி நடைபெற வேண்டும்.

தொழிலாளர்களுக்கு 25% ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கு கடந்த டிசம்பர் 2022 முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு உயர்ந்திமன்ற தீர்ப்பின்படி அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட வேண்டும்.

காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாமல், பணியாளர் பற்றாக்குறையால் சுமார் 30% பேருந்துகள் இயக்கப்படாமல் பொது மக்களுக்கான அரசுப் போக்குவரத்துச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு அரசுப் போக்குவரத்தை பொது மக்களுக்கான சேவையாக, பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதாக அமையும் வகையில் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

எனவே தமிழக அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply