புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று (23.08.2024) நடைபெற்ற முதலாவது தேசிய விண்வெளி தினக் கொண்டாட்டத்தில் இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். 2023, ஆகஸ்ட் 23 அன்று நிலவின் மேற்பரப்பில் ‘விக்ரம்’ லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில், தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது. ‘ரோபோட்டிக்ஸ் சேலஞ்ச்’ மற்றும் ‘பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தான்’ ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசுத்தலைவர், விருதுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இஸ்ரோ அதன் தொடக்கத்திலிருந்தே ஒரு அற்புதமான பயணத்தை மேற்கொண்டது என்று கூறினார். இதனுடன், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இஸ்ரோ விலைமதிப்பற்ற பங்களிப்பையும் வழங்கியுள்ளது. குறைந்தபட்ச வளங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை உலகின் சிறந்த விண்வெளித் திட்டங்களில் ஒன்றாக உருவாக்கிய அர்ப்பணிப்பு உணர்வுள்ள விஞ்ஞானிகளை அவர் பாராட்டினார். விண்வெளி அறிவியலில் நமது நாடு தொடர்ந்து முன்னேறும் என்றும், சிறப்பான புதிய தரங்களை நாம் தொடர்ந்து உருவாக்குவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நாம் பல குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளோம்.
சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து, பாதுகாப்பு, எரிசக்தி, சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் விண்வெளித் துறையின் முன்னேற்றங்களால் பயனடைந்துள்ளன.
விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவுக்காரணமாக, புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்துள்ளது என்று குடியரசுத்தலைவர் சுட்டிக்காட்டினார்.
2030-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது அனைத்து விண்வெளி பயணங்களையும் கழிவுகள் இல்லாததாக மாற்ற முன்னேறி வருவது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
திவாஹர்