மத்திய வேளாண் – விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் 2024 ஆகஸ்ட் 21 அன்று மகாராஷ்டிராவின் நாந்தேட்டில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, பர்பானி மாவட்ட விவசாயிகள் தங்கள் சோயாபீன் பயிருக்கான காப்பீட்டு கோரிக்கைகள், அது தொடர்பாக நிலுவையில் உள்ள பிரச்சினை குறித்து மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர். இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேளாண் – விவசாயிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு திரு சௌகான் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக வேளாண், விவசாயிகள் நலத்துறை சார்பில் தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிஏசி) கூட்டம் 22.08.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில், பயிர் அறுவடை சோதனைகள் குறித்து காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்த ஆட்சேபனையை டிஏசி நிராகரித்தது.
நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டு தொகையைச் செலுத்த காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்த முடிவின் காரணமாக, பர்பானி மாவட்டத்தின் சுமார் 2,00,000 விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள ரூ. 200 முதல் ரூ. 225 கோடி வரையிலான உரிமை கோரல் தொகைகள் செலுத்தப்பட உள்ளன.
இன்று, 2024 ஆகஸ்ட் 24 அன்று, மத்திய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, ஒரு வாரத்திற்குள் நிலுவைத் தொகையை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திவாஹர்