பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தனது அமெரிக்க பயணத்தின் கடைசி நாளான ஆகஸ்ட் 25,2024 அன்று டென்னசி, மெம்ஃபிஸில் உள்ள தேசிய சிவில் உரிமைகள் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து, இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார். தேசிய சிவில் உரிமைகள் அருங்காட்சியகம், 17-ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரை அமெரிக்காவில் சிவில் உரிமைகள் இயக்கத்தின் வரலாற்றைக் கண்டறிந்துள்ளது, மேலும் இது 1968 இல் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலை செய்யப்பட்ட இடத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது. அகிம்சை போராட்டத்திற்கு மகாத்மா காந்தி உத்வேகம் அளித்ததை அங்கீகரிக்கும் வகையில் அவரது மார்பளவு சிலையும் இங்கு இடம்பெற்றுள்ளது.
மெம்ஃபிஸ், அட்லாண்டா, நாஷ்வில் மற்றும் அதன் அருகிலுள்ள இதர பகுதிகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய திரு ராஜ்நாத் சிங், இச்சமுதாய உறுப்பினர்களின் சாதனைகளையும், சமூகம், அறிவியல் மற்றும் பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வாழும் பாலமாக அவை இருப்பதாகவும், நெருக்கமான உறவுகளையும் நல்லெண்ணத்தையும் வளர்ப்பதாகவும் அவர் விவரித்தார்.
2019-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளில் மகாத்மா காந்தியின் கண்காட்சியை நிறுவுவதற்கும், தேசிய சிவில் உரிமைகள் அருங்காட்சியகத்திற்கு அருகில் இரண்டு கௌரவ ‘காந்தி வே’ தெரு அறிவிப்புக்குறிகளை வைப்பதற்கும் இந்திய சமூகத்தின் முயற்சிகளையும் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். திரு ராஜ்நாத் சிங் தனது அமெரிக்கப் பயணத்தின் கடைசி நிகழ்ச்சியில், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக் கதையையும், பிரகாசமான எதிர்காலத்துடன் கூடிய அபரிமிதமான வாய்ப்புகளையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
திவாஹர்