தேசிய புனல் மின் கழகமான என்.எச்.பி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு ‘நவரத்னா’ நிறுவனம் என்ற மதிப்புமிக்க அந்தஸ்தை வழங்கியுள்ளது. 30.08.2024 அன்று பொது நிறுவனத் துறை (நிதி அமைச்சகம்) வெளியிட்ட உத்தரவின்படி, என்.எச்.பி.சி ‘நவரத்னா நிறுவனம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கு அதிக செயல்பாட்டு மற்றும் நிதி சுயாட்சி வழங்கப்படுகிறது.
“இது என்.எச்.பி.சி குடும்பத்திற்கு உண்மையான வரலாற்றுத் தருணமாகும். எங்களின் குறிப்பிடத்தக்க நிதி மற்றும் செயல்பாட்டு சாதனைகளுக்கான அங்கீகாரமாகும்” என்று என்.எச்.பி.சி-ன் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு ஆர்.கே.சவுத்ரி கூறினார். நவரத்னா அந்தஸ்தை மத்திய அரசு வழங்குவதற்கு மத்திய எரிசக்தி அமைச்சகம் அளித்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் என்.எச்.பி.சி குடும்பத்தின் சார்பில் அவர் நன்றி தெரிவித்தார். நாட்டின் நீர்மின் திறனைப் பயன்படுத்துவதில் என்.எச்.பி.சி முக்கிய பங்கு வகிக்கிறது. நாங்கள் ஒரு முழுமையான பசுமை சக்தி நிறுவனமாக செயல்படுகிறோம் என்று திரு சவுத்ரி மேலும் கூறினார்.
நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது என்.எச்.பி.சி.க்கு முக்கிய நன்மைகளைத் தரும். விரைவாக முடிவெடுக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும், ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இது உதவும். முக்கிய மூலதனச் செலவு மற்றும் முதலீட்டு திட்டங்களுக்கு இது ஆதரவளிக்கும். வளர்ச்சியை ஊக்குவிக்கும், சந்தை வரம்பை விரிவுபடுத்தும். நீண்ட கால ஆதாயங்களை அடையும். கூட்டுத் தொழில்கள் மற்றும் வெளிநாட்டு அலுவலகங்களை நிறுவவும், புதிய சந்தைகளை அணுகவும், உள்ளூர் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவும் என்.எச்.பி.சி மேம்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும். கூடுதலாக, இது தொழில்நுட்ப கூட்டணிகளை மேம்படுத்துவதன் மூலமும், சந்தை நிலைப்பாட்டை வலுப்படுத்துவதன் மூலமும் புதுமைகளை அதிகரிக்கும்.
தற்போது, என்.எச்.பி.சி-ன் மொத்த நிறுவு திறன் 7144.20 மெகாவாட் ஆகும். இந்நிறுவனம் தற்போது 10442.70 மெகாவாட் திட்டங்களின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் 2000 மெகாவாட் சுபன்சிரி லோயர் திட்டம் (அசாம் / அருணாச்சல பிரதேசம்) மற்றும் 2880 மெகாவாட் திபாங் பல்நோக்கு திட்டம் (அருணாச்சல பிரதேசம்) ஆகியவை அடங்கும். தற்போது, என்.எச்.பி.சி 50,000 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களில் பணியாற்றி வருகிறது. இவை பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் உள்ளன. 2032-க்குள் 23,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனையும், 2047-க்குள் 50,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனையும் எட்ட தேசிய அனல் மின் கழகம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
எம்.பிரபாகரன்