நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் வல்லமை கொண்ட நான்காவது மற்றும் ஐந்தாவது கப்பல்களான ‘மால்பே மற்றும் முல்கி’ ஒரே நேரத்தில் அறிமுகம்.

இந்திய கடற்படைக்காக கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (சி.எஸ்.எல்) நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் வல்லமை கொண்ட நான்காவது மற்றும் ஐந்தாவது கப்பல்களான மால்பே மற்றும் முல்கி ஆகியவை கொச்சியில் செப்டம்பர் 9, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன. கடல்சார் மரபுகளுக்கு இணங்க, தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் வி.ஏ.டி.எம் வி ஸ்ரீனிவாஸ் முன்னிலையில் திருமதி விஜயா ஸ்ரீனிவாஸ் இந்த இரண்டு கப்பல்களின் சேவைகளைத் தொடங்கி வைத்தார். நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் வல்லமை கொண்ட எட்டு கப்பல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சி.எஸ்.எல்  இடையே ஏப்ரல் 30, 2019 அன்று கையெழுத்தானது.

 மாஹே வகை கப்பல்களில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். கடலோர நீர்நிலைகளில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள் மற்றும் கண்ணிவெடி பதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல்களை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்துவது, ‘தற்சார்பு இந்தியாவை’ நோக்கி உள்நாட்டு கப்பல் கட்டுவதில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் வல்லமை கொண்ட கப்பல்கள் 80% உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும், இதன் மூலம் பெரிய அளவிலான பாதுகாப்பு உற்பத்தி இந்திய உற்பத்தி அலகுகளால் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்து, நாட்டிற்குள் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உருவாக்குகிறது.

Leave a Reply