பசுமை ஹைட்ரஜன் குறித்த இரண்டாவது சர்வதேச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

பசுமை ஹைட்ரஜன் குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.

பசுமை ஹைட்ரஜன் குறித்த 2 வது சர்வதேச மாநாட்டில் அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்று தனது உரையைத் தொடங்கிய பிரதமர், உலகம் ஒரு முக்கியமான மாற்றத்தை சந்தித்து வருவதாகக் கூறினார். பருவநிலை மாற்றம் என்பது எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, அதன் தாக்கத்தை இப்போதே உணர முடியும் என்ற உணர்வு வளர்ந்து வருவதை அவர் குறிப்பிட்டார். “தற்போது இங்கே நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்று திரு மோடி கூறினார். எரிசக்தி மாற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவை உலகளாவிய கொள்கை விவாதத்தின் மையமாக மாறியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

தூய்மையான மற்றும் பசுமையான பூமியை உருவாக்குவதில் நாட்டின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டிய பிரதமர், பசுமை எரிசக்தி குறித்த பாரீஸ் உறுதிமொழிகளை நிறைவேற்றிய முதல் ஜி20 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்தார். இந்த உறுதிமொழிகள் 2030 என்ற இலக்குக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவில் நிறுவப்பட்ட புதைபடிவம் அல்லாத எரிபொருள் திறன் கிட்டத்தட்ட 300% அதிகரித்துள்ளது என்றும், சூரிய மின்சக்தி திறன் 3,000% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் கூறினார். இந்த சாதனைகளுடன் நாம் ஓய்வதில்லை என்றும், தற்போதுள்ள தீர்வுகளை வலுப்படுத்துவதில் நாடு கவனம் செலுத்துகிறது என்றும், புதிய மற்றும் புதுமையான பகுதிகளையும் காண்கிறது என்றும் திரு மோடி சுட்டிக் காட்டினார், இங்குதான் பசுமை ஹைட்ரஜன் கவனத்திற்குரியது என்று குறிப்பிட்டார்.

“பசுமை ஹைட்ரஜன் உலகின் எரிசக்தி சூழலில் ஒரு கூடுதல் நம்பிக்கைக்குரியதாக உருவாகி வருகிறது” என்று குறிப்பிட்ட பிரதமர், மின்மயமாக்க கடினமாக உள்ள தொழில்களில் கரியமில வாயு வெளியேற்றம் செய்ய இது உதவும் என்று கூறினார். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், உரங்கள், எஃகு, கனரக போக்குவரத்து மற்றும் இதன் மூலம் பயனடையும் பல்வேறு துறைகளை அவர் உதாரணங்களாக எடுத்துரைத்தார். உபரி புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சேமிப்பு தீர்வாக பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தலாம் என்றும் பிரதமர் மோடி பரிந்துரைத்தார். 2023-ல் தொடங்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தைப் குறிப்பிட்ட பிரதமர், பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான இந்தியாவின் இலக்குகளை சுட்டிக் காட்டினார். “தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் முதலீட்டிற்கு உத்வேகம் அளிக்கிறது” என்று பிரதமர் திரு மோடி கூறினார். அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடுகள், தொழில் மற்றும் கல்வியாளர்களுக்கு இடையேயான கூட்டாண்மை, இந்தத் துறையில் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஊக்கமளித்தல் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். பசுமைப் பணிகள் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசிய அவர், இந்தத் துறையில் நாட்டின் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கான அரசின் முயற்சியை எடுத்துரைத்தார்.

பருவநிலை மாற்றம், எரிசக்தி மாற்றம் குறித்த உலகளாவிய பிரச்சனைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், இதுபோன்ற பிரச்சனைகளுக்கான பதில்கள் உலகளாவியதாக இருக்க வேண்டும் என்று கூறினார். கரியமில வாயு வெளியேற்றம் இல்லாதவற்றில் பசுமை ஹைட்ரஜனின் தாக்கத்தை ஊக்குவிக்க சர்வதேச கூட்டாண்மைகளின் முக்கியமான தேவையை அவர் வலியுறுத்தினார், மேலும் உற்பத்தியை அளவிடுதல், செலவுகளைக் குறைத்தல் மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை ஒத்துழைப்பின் மூலம் விரைவு படுத்த முடியும் என்று கூறினார். தொழில்நுட்பத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கூட்டாக முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வெளிப்படுத்தினார். 2023 செப்டம்பரில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டை நினைவு கூர்ந்த பிரதமர், பசுமை ஹைட்ரஜன் மீது சிறப்பு கவனம் செலுத்துவதை எடுத்துரைத்தார், மேலும் புது தில்லி ஜி-20 தலைவர்களின் பிரகடனம் ஹைட்ரஜன் குறித்த ஐந்து உயர்மட்ட தன்னார்வ கொள்கைகளை ஏற்றுக்கொண்டது, அவை ஒருங்கிணைந்த வழிவகைகளை உருவாக்க உதவுகின்றன என்பதை சுட்டிக் காட்டினார். “நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் – இப்போது நாம் எடுக்கும் முடிவுகள் நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

பசுமை ஹைட்ரஜன் துறையை முன்னெடுத்துச் செல்வதில், உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் திரு மோடி இன்று அழைப்பு விடுத்தார். “இதுபோன்ற ஒரு முக்கியமான துறையில், கள வல்லுநர்கள் வழிநடத்துவதும், ஒன்றிணைந்து செயல்படுவதும் முக்கியம்,” என்று அவர் கூறினார், பசுமை ஹைட்ரஜன் தொழில் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள கூட்டு நிபுணத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தத் துறைக்கு மேலும் ஆதரவளிக்கும் பொதுக் கொள்கை மாற்றங்களை பரிந்துரைக்குமாறு விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை பிரதமர் ஊக்குவித்தார். “பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் எலக்ட்ரோலைசர்கள் மற்றும் பிற கூறுகளின் செயல்திறனை மேம்படுத்த முடியுமா? கடல்நீர் மற்றும் நகராட்சி கழிவுநீரை உற்பத்திக்கு பயன்படுத்துவது குறித்து ஆராயலாமா? இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார், குறிப்பாக பொது போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிகளுக்கு பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதில். “இதுபோன்ற தலைப்புகளை ஒன்றாக ஆராய்வது உலகெங்கிலும் பசுமை எரிசக்தி மாற்றத்திற்கு பெரிதும் உதவும்” என்று கூறிய பிரதமர், பசுமை ஹைட்ரஜன் குறித்த 2 வது சர்வதேச மாநாடு போன்ற மன்றங்கள் இந்த பிரச்சினைகளில் அர்த்தமுள்ள பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சவால்களை வென்ற மனிதசமுதாய வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர், “ஒவ்வொரு முறையும், கூட்டு மற்றும் புதுமையான தீர்வுகள் மூலம் பிரச்சனைகளை நாம் சமாளித்தோம்” என்று கூறினார். கூட்டு நடவடிக்கை மற்றும் புதுமைப் படைப்பு உணர்வு ஆகியவை நீடித்த எதிர்காலத்தை நோக்கி உலகை வழிநடத்தும் என்று அவர் வலியுறுத்தினார். “நாம் ஒன்றாக இருக்கும்போது எதையும் சாதிக்க முடியும்” என்று குறிப்பிட்ட திரு மோடி, பசுமை ஹைட்ரஜனின் வளர்ச்சி மற்றும் ஈடுபடுத்துதலை விரைவுபடுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளை வலியுறுத்தினார். பசுமை ஹைட்ரஜன் குறித்த 2-வது சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “பசுமை ஹைட்ரஜனின் வளர்ச்சி மற்றும் ஈடுபடுத்துதலை விரைவுபடுத்த நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்று அவர் கூறினார், பசுமையான மற்றும் நிலையான பூமியை உருவாக்குவதில் ஒத்துழைப்பின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

Leave a Reply