மீன்வளத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவின் நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர் முயற்சிகளையும், திட்டங்களையும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் புதுதில்லியில் இன்று நடைபெற்ற பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனாவின் 4-வது ஆண்டு விழாவில் தொடங்கி வைத்தார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நார்வே, சிலி ஆகிய நாடுகளைச்சேர்ந்த தூதரகங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மீன்வளத் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொகுப்புகளுக்கான நிலையான இயக்க நடைமுறையை (எஸ்ஓபி) வெளியிட்ட மத்திய அமைச்சர், முத்து சாகுபடி, அலங்கார மீன்வளம் மற்றும் கடற்பாசி சாகுபடிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மூன்று சிறப்பு மீன்வள உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொகுப்புகளை நிறுவுவதாக அறிவித்தார். இந்தத் தொகுப்புகள் முக்கிய துறைகளுக்குள் கூட்டுப்பண்ணை, ஒத்துழைப்பு மற்றும் புதுமையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, உற்பத்தி மற்றும் சந்தை அணுகல் என இரண்டையும் மேம்படுத்துகின்றன.
கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 கடலோர கிராமங்களை பருவநிலைக்குத் தாக்குப்பிடிக்கும் கடலோர மீனவ கிராமங்களாக மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் மத்திய அமைச்சர் வெளியிட்டார். ரூ.200 கோடி ஒதுக்கீட்டுடன், மாறிவரும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு மத்தியில் மீன்பிடி சமூகங்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக நிலையான மீன்பிடித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் காலநிலை-ஸ்மார்ட் வாழ்வாதாரங்களில் இந்த முயற்சி கவனம் செலுத்தும்.
மேலும், ‘உள்நாட்டு இனங்களை ஊக்குவித்தல்’ மற்றும் ‘மாநில மீன் பாதுகாப்பு’ குறித்த கையேட்டை மத்திய அமைச்சர் வெளியிட்டார். 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 22 மாநிலங்கள் தங்கள் மாநில மீன்களை தத்தெடுத்துள்ளன அல்லது அறிவித்துள்ளன.
நிகழ்வில் பங்கேற்றோரிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், இந்தியாவின் மீன்வளத் துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக முதலீடான பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் தாக்கம் குறித்து எடுத்துரைத்தார். மீன்வளத் துறையில் இதுவரை எட்டப்பட்ட முடிவுகள் முந்தைய உள்கட்டமைப்பு மேம்பாடுகளின் விளைவாகும். எனவே வளர்ச்சியடைந்த இந்தியா – 2047 இலக்குகளை அடைய நாம் முன்னேற வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் எதிர்கால தலைமையின் கீழ், 3 கோடி மீன்வளப் பங்குதாரர்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக அரசு பணியாற்றி வருகிறது என்று மத்திய அமைச்சர் கூறினார்.
பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டத்தின் சாதனைகளை பாராட்டிய மத்திய இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், உள்கட்டமைப்பு, பல்லுயிர் பெருக்கம் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய முன்முயற்சிகளை சுட்டிக்காட்டினார். இந்த சாதனைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான கூட்டு முயற்சிகளைப் பாராட்டிய அவர், இந்தத் துறையை முன்னெடுத்துச் செல்வதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
எம்.பிரபாகரன்