இந்தியா-ஓமன் கூட்டு ராணுவப் பயிற்சி அல் நஜா V-க்கு இந்திய ராணுவப்படை பிரிவு புறப்பட்டது.

இந்தியா-ஓமன் கூட்டு இராணுவப் பயிற்சியின் 5-வது பதிப்பான அல் நஜாவில் பங்கேற்பதற்காக, இந்திய ராணுவக் குழுவினர் இன்று புறப்பட்டனர். இந்த பயிற்சி 2024 செப்டம்பர் 13 முதல் 26 வரை ஓமானின் சலாலாவில் உள்ள ரப்கூட் பயிற்சி பகுதியில் நடைபெற உள்ளது. அல் நஜா பயிற்சி 2015 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையே மாறி மாறி நடத்தப்படுகிறது. இதே பயிற்சியின் கடைசி பதிப்பு ராஜஸ்தானில் உள்ள மகாஜனில் நடத்தப்பட்டது.

60 வீரர்களைக் கொண்ட இந்திய இராணுவப் பிரிவு, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை ரெஜிமென்ட்டின் ஒரு பட்டாலியன் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் சேவைகளைச் சேர்ந்த வீரர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. 60 வீரர்களைக் கொண்ட ஓமன் ராயல் ஆர்மி படைப்பிரிவும் அந்நாட்டு எல்லைப் படையின் துருப்புக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பினரின் கூட்டு இராணுவ திறனை மேம்படுத்துவதே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும். இந்த பயிற்சி, பாலைவன சூழல் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்.

கூட்டு திட்டமிடல், சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை, கட்டட வளாக சண்டை, நடமாடும் வாகன சோதனைச் சாவடி நிறுவுதல், எதிர் ட்ரோன் மற்றும் அறை தலையீடு ஆகியவை பயிற்சியின் போது ஒத்திகை செய்யப்பட வேண்டிய தந்திரம் பயிற்சிகளில் அடங்கும். நிஜ உலக பயங்கரவாத எதிர்ப்பு பணிகளை உருவகப்படுத்தும் ஒருங்கிணைந்த கள பயிற்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

அல் நஜா V பயிற்சி, இரு தரப்பினரும் கூட்டு நடவடிக்கைகளுக்கான தந்திரங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளில் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ள அனுமதிக்கும். இது இரு படைகளுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லெண்ணம் மற்றும் தோழமையை வளர்க்கும். இது தவிர, இந்த கூட்டுப் பயிற்சி பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, இரு நட்பு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும்.

Leave a Reply