மத்திய மாநில அரசுகள் கைத்தறித் தொழிலைப் பாதுகாக்க, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் நெசவுத்தொழிலை நம்பி வாழ்கிறார்கள்.

உயர்மதிப்பு மிக்க பட்டுப்புடவைகள், பட்டுய் வேஷ்டிகள், பட்டு துண்டுகள் ஆகியவை கைத்தறி நெசவு லூம்களில் மட்டுமே நெய்திட 1985 கைத்தறி சட்டம் வகை செய்துள்ளது.

கைத்தறியில் தயாரிக்கக்கூடிய பட்டு வஸ்திரங்கள் விசைத்தறி (பவர் லூம்) மூலம் தயாரிப்பதால் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக விசைத்தறி மூலம் பட்டு சேலை உற்பத்தி அதிகமாக நடைபெறுவதால் கைத்தறித் தொழில் மூலம் நெசவு செய்யும் சுமார் 50 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கைத்தறி சட்டத்தில் உள்ளது முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக விசைத்தறி தொழிலில் ஈடுபடுபவர்களால் கைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதையும், தரம் மிக்க அசல் வஸ்திரங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதையும் மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

அதாவது 1985 ரக ஒதுக்கீடு தடைச்சட்டத்தில் உள்ள கோட்பாடுகள் முறையாக சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதை மத்திய மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு விசைத்தறியில் எந்தவித ஜரிகையும் பயன்படுத்தி சேலை நெசவு செய்யக்கூடாது என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டால் இந்தியாவின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் உரிய பட்டு கைத்தறித் தொழில் நலிவடைந்து போகும். இதனால் கைத்தறி தொழிலும், கைத்தறி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளனர்.

இச்சூழலில் கைத்தறி தொழிலில் ஈடுபட நெசவு செய்யும் தொழிலாளர்கள் வரத் தயங்குகிறார்கள்.

எனவே மத்திய மாநில அரசுகள் கைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, கைத்தறி தொழிலைப் பாதுகாத்து, கைத்தறி நெசவாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் முன்னேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply